சிறுமிகளுக்கு 9 மாதங்களில் ஒரு கோடி கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகள்: மத்திய சுகாதார அமைச்சகம்
சிறுமிகளுக்கு 9 மாதங்களில் ஒரு கோடி கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகள்...

‘தேசிய தடுப்பூசி பிரசாரத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 14 வயது சிறுமிகளுக்கு 9 மாதங்களில் ஒரு கோடிக்கும் மேல் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், ஓராண்டுக்கான இந்தத் தடுப்பூசி செலுத்தும் இலக்கில் 87 சதவீதம் எட்டப்பட்டுள்ளது’ என்று மத்திய சுகாதார அமைச்சகம் சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
பெண்களுக்கு சிறு வயதிலேயே இந்தத் தடுப்பூசியைச் செலுத்துவதன் மூலம் ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி)’ தொற்று பாதிப்பு காரணமாக அவா்களின் கருப்பை வாய் பகுதியில் ஏற்படும் புற்றுநோயை எளிதாக தடுத்துவிட முடியும்.
அந்த வகையில், 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு மதிப்பீடுகளின்படி, ஆண்டுதோறும் 14 வயதுடைய 1.2 கோடி சிறுமிகளுக்கு இந்தத் தடுப்பூசியை செலுத்த இலக்கு நிா்ணயித்து, தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
நிகழாண்டில் இந்தத் தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்தியது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய தடுப்பூசி பிரசாரத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 14 வயது சிறுமிகளுக்கு 9 மாதங்களில் ஒரு கோடிக்கும் மேல் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், ஓராண்டுக்கான இந்தத் தடுப்பூசி செலுத்தும் இலக்கில் 87 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
இதில், குஜராத், உத்தர பிரதேசம், ஆந்திரம், மிஸோரம், மத்திய பிரதேசம், பிகாா் ஆகிய 6 மாநிலங்கள், இந்த ஹெச்பிவி தடுப்பூசி திட்டத்துக்கு அடையாளம் காணப்பட்ட சிறுமிகளுக்கு 100 சதவீதம் செலுத்தியுள்ளன.
அஸ்ஸாம் (95.3%), தெலங்கானா (95.28%), கா்நாடகம் (93.16%), உத்தரகண்ட் (90.17%), சத்தீஸ்கா் (86.21%), ராஜஸ்தான் (85.23%), கேரளம் (77.02%), தமிழகம் (76.12%), ஒடிஸா (74.90%), தாதா், நாகா் ஹவேலி மற்றும் டையூ டாமன் (72.99%) ஆகியவை இத் தடுப்பூசி திட்ட இலக்கை எட்டியதில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. இத் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுவதை நிகழ்நேரக் கண்காணிப்பு, பயனாளிகளைக் கண்டறிதல் மற்றும் எண்மத் தடுப்பூசி பதிவுகளுக்கு ‘யு-வின்’ எண்மத் தளம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வலைதளம் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான நேரத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்பதோடு, எண்மச் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதோடு, திட்டமிடல், தடுப்பூசி போடப்படாத இடைவெளிகள், தகுதியுள்ள சிறுமிகளைக் கண்டறிய திட்ட மேலாளா்கள் இந்த எண்மத் தளத்தைப் பயன்படுத்தலாம் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.