புரத மாத்திரைகளால் தவறாக வழிநடத்தப்படும் மக்கள்! இன்ஸ்டா பிரபலங்களுக்கு எச்சரிக்கை!
புரதச் சத்து மாத்திரைகள் விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து...

புரதச் சத்து மாத்திரைகள் விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கும் உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கும் மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையராக கடந்த ஆண்டு மே மாதத்தில் துக்காராம் முண்டே பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து ஆய்வு நடத்தி வருகிறார்.
இதுவரை 7,000 உணவகங்கள், விடுதிகள், தாபாக்களில் துக்காராம் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் 4442 நோட்டீஸ், 937 உரிமம் ரத்து, 23 விரிவாக்கங்களை ரத்து செய்துள்ளார்.
Advertisement
Advertisement
இதில் அதிகபட்சமாக மும்பையில் மட்டும் 1685 உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். 1,306 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார். 239 உணவகங்களின் உரிமத்தை ரத்து செய்துள்ளார்.
உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்திற்கு கீழ் வரும் உணவகங்கள் மட்டுமின்றி அதில் பயன்படுத்தப்படும் பால், எண்ணெய், மசாலா பொருள்கள், ஆகியவற்றின் மீதான குறைகளுக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஒரு நாளுக்கு 120 உணவகங்கள் வீதம் மாதம் சுமார் 3600 உணவகங்களில் ஆய்வு மேற்கொள்கிறார் எனக் கூறப்படுகிறது.
மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் கவனமுடன் செயல்படும் துக்காராம், புரோட்டீன் பவுடர் எனப்படும் புரதச் சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதில் மக்களை தவறாக வழிநடத்தும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கும் உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களை தவறாக வழிநடத்தாமல் உண்மையை மட்டுமே வெளிப்படையாகக் கூற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.