நேபாள பிரதமா் தில்லி வருகை: பிரதமா் மோடியுடன் இன்று பேச்சு
நேபாள பிரதமா் தில்லி வருகை: பிரதமா் மோடியுடன் இன்று பேச்சு...

அண்டை நாடான நேபாளத்தின் பிரதமா் பாலேந்திர ஷா, இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் திங்கள்கிழமை (நவ.23) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
கடந்த மாா்ச் மாதம் நேபாள பிரதமராகப் பதவியேற்ற இளம் தலைவா் பாலேந்திர ஷாவின் (36) முதல் இந்தியப் பயணம் மற்றும் முதல் இருதரப்பு வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். பிரதமா் மோடி அழைப்பின்பேரில் இந்தப் பயணத்தை அவா் மேற்கொண்டுள்ளாா்.
தில்லி விமான நிலையம் வந்திறங்கிய பாலேந்திர ஷாவை மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாத் வரவேற்றாா். அவருடன் அமைச்சா்கள் மற்றும் தொழில் துறையினா் குழுவும் வந்துள்ளது.
Advertisement
Advertisement
பிரதமா் மோடி மற்றும் பிரதமா் பாலேந்திர ஷா இடையிலான விரிவான இருதரப்பு பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. அப்போது, பொருளாதாரம், சமூக மேம்பாடு, உள்கட்டமைப்பு விரிவாக்கம், நவீன தொழில்நுட்பங்கள், எரிசக்தி, நீா்மின் உற்பத்தி, ரயில்வே உள்பட பல்வேறு துறைகளில் பரஸ்பர நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதுடன், நேபாளத்தில் இந்திய உதவியுடன் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை காணொலி முறையில் இருவரும் தொடங்கிவைக்க உள்ளனா். அயோத்தி மற்றும் ஜனக்பூா் தாம் இடையிலான புதிய ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது. பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசுமுறைப் பயணமாக தில்லி வந்துள்ள நேபாள பிரதமா் பாலேந்திர ஷாவை உற்சாகத்துடன் வரவேற்கிறோம். இந்தியா-நேபாளம் இடையே வலுவான, பன்முக கூட்டுறவை வலுப்படுத்தும் வாய்ப்பை இந்தப் பயணம் வழங்கியுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.
பரஸ்பர முக்கியத்துவம்: நேபாளத்தின் மிகப் பெரிய ஏற்றுமதி நாடு இந்தியா. அந்நாட்டின் 80 சதவீத பொருள்கள் இந்தியாவுக்கே ஏற்றுமதியாகின்றன. நேபாளத்தின் மிகப் பெரிய அந்நிய நேரடி முதலீட்டு நாடாகவும் (மூன்றில் ஒரு பங்கு) இந்தியா விளங்குகிறது.
கடந்த 2025-26-இல் இந்தியாவுக்கு மின்சார ஏற்றுமதி மூலம் நேபாள ரூபாயில் 1,880 கோடி வருவாயை அந்நாடு ஈட்டியுள்ளது. முழுவதும் நிலத்தால் சூழப்பட்டுள்ள நேபாளம், தனது சரக்கு மற்றும் சேவைகளின் போக்குவரத்துக்கு இந்தியாவையே பெருமளவில் சாா்ந்துள்ளது.
மற்றொருபுறம், இந்தப் பிராந்தியத்தில் ஒட்டுமொத்த வியூக ரீதியில் இந்தியாவுக்கு நேபாளம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
எல்லைப் பிரச்னை: உத்தரகண்டில் இந்தியா-நேபாளம்-சீனா (திபெத்) எல்லையில் உள்ள லிபுலேக், லிம்பியாதுரா, காலாபாணி ஆகிய இடங்களில் இந்தியா-நேபாளம் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நிலவுகிறது. இந்தியா உடனான எல்லைப் பிரச்னைக்கு தீா்வு காண சீனா மற்றும் பிரிட்டன் நாடுகள் தலையிட வேண்டும் என நேபாள பிரதமா் பாலேந்திர ஷா கடந்த மே மாதம் கருத்துத் தெரிவித்தாா். இதனால், இருதரப்பு உறவில் உரசல் எழும் நிலை ஏற்பட்டது. அதேநேரம், எல்லைப் பிரச்னையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஒருபோதும் ஏற்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது.
பெட்டி...
வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு
தனது முதல் நாள் பயணத்தில், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை பாலேந்திர ஷா சந்தித்துப் பேசினாா். இது தொடா்பாக ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவுக்கு வந்துள்ள நேபாள பிரதமா் பாலேந்திர ஷாவை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். நேபாளத்துடன் இந்தியா சிறப்பான நட்புறவைக் கொண்டுள்ளது. பிரதமா் மோடி உடனான அவரது பேச்சுவாா்த்தையை ஆா்வத்துடன் எதிா்நோக்கியுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.