முகப்பு

புணே: கல்லூரி லிஃப்டில் சிக்கிக்கொண்ட மாணவி 12 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு!

புணேவில் கல்லூரி லிஃப்டில் சிக்கிக்கொண்ட மாணவி பத்திரமாக மீட்கப்பட்டது குறித்து...

22 நவம்பர் 2026, 4:46 pm
புணே: கல்லூரி லிஃப்டில் சிக்கிக்கொண்ட மாணவி 12 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு!
லிஃப்ட். - கோப்புப்படம்.
பகிர்:

புணேவில் கல்லூரி லிஃப்டில் சிக்கிக்கொண்ட மாணவி 12 மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் உள்ள கல்லூரி லிஃப்டில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 19 வயது பொறியியல் மாணவி சுமார் 12 மணி நேரம் சிக்கிக்கொண்டதாகக் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை மாலை 6 முதல் 7 மணிக்குள் நிகழ்ந்துள்ளது. லோனி கல்போரில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியைச் சேர்ந்த அந்த மாணவி, வகுப்புகளை முடித்துவிட்டு வெளியேறும்போது இது நடந்துள்ளது.

இதுகுறித்து லோனி கல்போர் காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் சமாதன் பவார் கூறுகையில், "அவர்தான் கல்லூரியிலிருந்து வெளியேறிய கடைசி மாணவி. ஐந்தாவது தளத்திலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தபோது, தொடர்ச்சியான மின் தடையால் லிஃப்ட் பாதியிலேயே நின்றுவிட்டது. அந்த நேரத்தில் கல்லூரியில் வேறு மாணவர்கள் யாரும் இல்லாததால், இந்தச் சம்பவம் யாருடைய கவனத்திற்கும் வரவில்லை" என்றார்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, மாணவி வீட்டிற்குத் திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோரும், அதே கல்லூரியில் படிக்கும் அவரது சகோதரியும் அவரைத் தேடினர். பின்னர் புதன்கிழமை இரவு 9 மணியளவில் லோனி கல்போர் காவல் நிலையத்திற்குச் சென்று, மாணவியைக் காணவில்லை என்று புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிரத் தேடுதல் பணியைத் தொடங்கினர். வியாழக்கிழமை அதிகாலை 5 மணி வரை கல்லூரி வளாகம் மற்றும் அருகிலுள்ள கட்டடங்கள், பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்றது. இறுதியில், கல்லூரியின் ஐந்தாவது தளத்தில் நின்றிருந்த லிஃப்டில் மாணவி சிக்கியிருப்பது கண்டறியப்பட்டு, காலை 7 மணியளவில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

மாணவி பாதுகாப்பாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தங்களுக்கு எந்தப் புகாரும் இல்லை என்று அவரது பெற்றோர் காவல்துறையிடம் தெரிவித்தனர். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் லிஃப்டின் செயல்பாட்டில் செய்யப்பட வேண்டிய மேம்பாடுகள் குறித்த விவரங்களைக் கேட்டு, கல்லூரி நிர்வாகத்திற்குக் காவல்துறை கடிதம் எழுதியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

summary

A 19-year-old engineering student was trapped inside a campus lift for nearly 12 hours after a technical malfunction at her college in Maharashtra's Pune district, police said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.