பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறை! கேரள முதல்வர் அதிரடி
பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்டு அவர்களைக் கைவிடும் பிள்ளைகளுக்கு சிறை..

பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்டு அவர்களைக் கைவிடுதல், துன்புறுத்தும் பிள்ளைகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கேரள முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.
பத்தனாபுரத்தில் உள்ள காந்தி பவனில், முதியவர்களுக்கான ரூ. 20 கோடி மதிப்பிலான நவீன இல்லத்தைத் திறந்து வைத்தபோது, இந்தச் சட்டத்தில் உள்ள முக்கிய அம்சத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
தங்கள் அரசு பதவியேற்றவுடன் எடுத்த முதல் முடிவு, முதியவர்களுக்கென ஒரு தனித் துறையை உருவாக்கியதுதான் என்றும், இதுவே நாட்டிலேயே இத்தகைய முதல் முயற்சி என்றும் அவர் கூறினார்.
Advertisement
Advertisement
உலகிலேயே வேறெங்கும் இல்லாத வகையில், முதியவர்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கும் சட்டத்தைத் தனது அரசு நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பெற்றோரின் சொத்துகளை முழுமையாகப் பெற்றுக்கொண்ட பிறகு, அவர்களைக் கைவிடும் பிள்ளைகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் விதியை நான் திட்டமிட்டே இந்தச் சட்டத்தில் சேர்த்துள்ளேன்.
இந்தச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன், பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்டு அவர்களைக் கைவிடும் நபர்கள் நிச்சயமாகச் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம் என்று அவர் உறுதியாகக் கூறினார்.
பிள்ளைகளை வளர்ப்பதற்காகப் பெற்றோர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை, இந்த மாநிலமும் வருங்கால சந்ததியினரும் புரிந்துகொள்ள வேண்டும்.
பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்குப் பல்வேறு இன்னல்களை அனுபவிப்பதைத் தான் நேரில் பார்த்துள்ளேன். பிள்ளைகள் பெரிய நிலையை அடைந்த பிறகு, தங்கள் பெற்றோரைப் புறக்கணிக்கிறார்கள். இனி, இது நடக்கக்கூடாது. இத்தகைய கலாசாரம் கேரளத்தில் இருக்கவே கூடாது.
பெற்றோரை அன்புடன் அருகில் வைத்துப் பராமரிக்கும் ஒரு புதிய கலாசாரம் நமக்குத் தேவை. கேரளத்தில் எந்தவொரு முதியவரும் தனிமைப்படுத்தப்படக்கூடாது என்பதே எனது மிகப்பெரிய கனவு,.
இந்த வசதிக்கான கட்டுமானப் பணிகளுக்கு நிதியுதவி அளித்ததற்காக, லுலு குழுமத் தலைவர் எம். ஏ. யூசுப் அலியை சதீசன் பாராட்டினார். மேலும், இந்த தொழிலதிபர் தேவைப்படுபவர்கள் பலருக்கு உதவியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனக்குப் பல செல்வந்தர்களைத் தெரியும். அவர்கள் பொதுவாக அனைவருக்கும் உதவுவதில்லை. அவர்கள் எப்போதும் தங்கள் செல்வத்தை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், யூசுப் அலி தனது இதயத்தில் இறைவனின் பெயரைத் தாங்கியிருக்கிறார். அதுவே அவருக்கு மற்றவர்களுக்கு உதவும் ஆற்றலை அளிக்கிறது. இது அவர் ஏற்றுக்கொண்ட ஒரு பொறுப்பு என்று முதல்வர் கூறினார்.