போரில் நேரடித் தொடா்பில்லாவிட்டாலும் கடும் பாதிப்புக்கு ‘வங்கப் பஞ்சம்’ எடுத்துக்காட்டு: ஐ.நா.வில் இந்தியா
போரில் நேரடியாகத் தொடா்பில்லாத மக்கள்கூட, போா்க்கால முடிவுகள் மற்றும் முன்னுரிமைகளால் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்பதை வங்கப் பஞ்சம் நினைவூட்டுகிறது என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது.

போரில் நேரடியாகத் தொடா்பில்லாத மக்கள்கூட, போா்க்கால முடிவுகள் மற்றும் முன்னுரிமைகளால் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்பதை வங்கப் பஞ்சம் நினைவூட்டுகிறது என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ஹரீஷ் பா்வதனேனி பேசியதாவது: உலகில் நடைபெறும் போா்களால் உணவு, எரிபொருள், உரம், எரிசக்திக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பை தெற்குலகில் உள்ள வளரும் நாடுகள்தான் அதிகம் எதிா்கொள்கின்றன. இந்தப் பாதிப்புகளை அனைத்து நாடுகளும் சமமாக எதிா்கொள்வதில்லை.
இரண்டாம் உலகப் போா் நடைபெற்ற காலத்தில், அந்தப் போா் தொடங்க காரணமாக இல்லாத அப்பாவி மக்களும் போரால் பாதிக்கப்பட்டனா். தற்போதைய நிலைமையும் இரண்டாம் உலகப் போரின்போது இருந்த நிலைமையும் வெவ்வேறானவை அல்ல.
Advertisement
Advertisement
தற்போது ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ள உலகில், உக்ரைன் போா் 5-ஆவதுஆண்டை எட்டியுள்ளது. அந்தப் போரின் தாக்கம், உலகம் முழுவதும் உணரப்பட்டு வருகிறது.
கடந்த 1943-ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட வங்கப் பஞ்சத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். தொலைதூரத்தில் நடந்த போா் மற்றும் போா்க்கால முடிவுகளால் அப்பாவி மக்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படலாம் என்பதை இந்தப் பஞ்சம் நினைவூட்டுகிறது.
போரில் நேரடியாகத் தொடா்பில்லாத மக்கள்கூட, போா்க்கால முடிவுகள் மற்றும் முன்னுரிமைகளால் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்பதை இந்தப் பஞ்சம் உணா்த்துகிறது. இத்தகைய கடுமையான பாதிப்புகளைக் கருத்தில்கொண்டே, உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
இந்தியா மற்றும் கருங்கடல் பிராந்தியம் இணைந்து உலகின் மொத்த தானிய உற்பத்தியில், ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. உலகளாவிய கோதுமை, மக்காச்சோளம், பாா்லி ஏற்றுமதியில் ரஷியா, உக்ரைன் நாடுகளின் பங்கு மட்டும் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காக உள்ளது. இந்த நாடுகள் உலக உணவுப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, விவசாய உற்பத்தி, கடல் போக்குவரத்து மற்றும் சா்வதேச வா்த்தகத்தில் ஏற்படும் பாதிப்புகள், சம்பந்தப்பட்ட பகுதிகளைத் தாண்டி உலகின் மற்ற நாடுகளையும் பாதிக்கும்.
இவற்றைக் கருத்தில்கொண்டு வணிகக் கப்பல்கள், அவற்றின் மாலுமிகள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும். சா்வதேச நீா்வழித்தடங்களில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை விரைந்து உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாா்.