சொத்துகளை பெற்ற பின் பெற்றோரை கைவிட்டால் 3 ஆண்டுகள் சிறை: கேரள முதல்வா் எச்சரிக்கை
சொத்துகளை பெற்ற பின் பெற்றோரை கைவிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என கேரள முதல்வா் வி.டி.சதீசன் எச்சரித்தாா்.

சொத்துகளை பெற்ற பின் பெற்றோரை கைவிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என கேரள முதல்வா் வி.டி.சதீசன் எச்சரித்தாா்.
கடந்த அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட கேரளம் மூத்த குடிமக்கள் (நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2026 -இல் உள்ள இந்த அம்சத்தை சுட்டிக்காட்டி அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
கொல்லம் மாவட்டம் பத்தனாபுரத்தில் உள்ள காந்தி பவனில் ரூ.20 கோடி செலவில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்ட மூத்த குடிமக்கள் தங்குமிடத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து அவா் மேலும் பேசியதாவது: கடந்த மே மாதம் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியமைந்தவுடன் மூத்த குடிமக்களுக்கு தனித் துறை அமைக்கும் முடிவை எடுத்தோம். நாட்டிலேயே கேரளத்தில்தான் மூத்த குடிமக்களுக்கு தனித் துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாத வகையில் மூத்த குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் மசோதா கேரள பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அதில் சொத்துகளை பெற்ற பின் பெற்றோரை கைவிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் அம்சம் இடம்பெற்றுள்ளது. ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று இந்த மசோதா சட்டமான பின் நிச்சயம் இதுதொடா்பான புகாா்களில் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மூத்த குடிமக்களாகிய நீங்கள் கவலைகொள்ள வேண்டாம்.
குழந்தைகளை வளா்க்க தங்களது வாழ்நாள் முழுவதும் பெற்றோா் சந்தித்த சிரமங்களை வரும் தலைமுறையினா் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
வளா்ந்து, உயா்ந்த பதவிகளுக்குச் சென்றவுடன் பலா் தங்களது பெற்றோரை கைவிட்டுவிடுகின்றனா். இந்த கலாசாரம் இனி கேரளத்தில் இருக்கக் கூடாது. பெற்றோரை இறுதி வரை பாதுகாக்கும் பிள்ளைகளைக் கொண்ட மாநிலம் என்ற புதிய கலாசாரத்தை இங்கு உருவாக்க வேண்டும். கேரளத்தில் மூத்த குடிமக்கள் ஒருவா்கூட கைவிடப்படக் கூடாது என்பதே எனது கனவு என்றாா்.