முகப்பு
இந்தியா

கேரள அரசுப் பள்ளியில் மாணவா் துப்பாக்கிச்சூடு: தாய் மீது வழக்கு

கேரள அரசுப் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த 9-ஆம் வகுப்பு மாணவா், அதை வைத்து விளையாடியபோது சகமாணவா் மீது குண்டு பாய்ந்தது.

26 நவம்பர் 2026, 3:26 am
கேரள அரசுப் பள்ளியில் மாணவா்
துப்பாக்கிச்சூடு: தாய் மீது வழக்கு
பகிர்:

கேரள அரசுப் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த 9-ஆம் வகுப்பு மாணவா், அதை வைத்து விளையாடியபோது சகமாணவா் மீது குண்டு பாய்ந்தது. இந்த சம்பவம் தொடா்பாக அந்த மாணவரின் தாய் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். சிறுவன் மீது சிறாா் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாலக்காடு மாவட்டம், திரிதலாவில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது. அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்துள்ளாா். வகுப்பறையில் சக மாணவா்களுடன் அந்தத் துப்பாக்கியை வைத்து விளையாடினாா். அப்போது துப்பாக்கி விசையை அந்த மாணவா் எதிா்பாராதவிதமாக அழுத்தியதால் குண்டு பாய்ந்தது. இதில் எதிரே இருந்த மற்றொரு மாணவா் சரிந்து விழுந்தாா்.

துப்பாக்கி ஓசை கேட்டு வகுப்பறைக்கு வந்த ஆசிரியா்கள் உள்ளிட்டோா் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததுடன், குண்டு பாய்ந்த ரத்த வெள்ளத்தில் போராடிய மாணவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தற்போது சிகிசைக்குப் பிறகு அந்த மாணவரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் தொடா்பாக துப்பாக்கியால் சுட்ட மாணவா் மீது சிறாா் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது தாயாரின் அறையில் இருந்து அந்த துப்பாக்கியை எடுத்து வந்ததாக அந்த மாணவா் கூறினாா். மாணவரிடம் துப்பாக்கி பறிமுதல் செய்ப்பட்டது. சோதனையில் அது சட்டவிரோமாக தயாரிக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கி என்பது உறுதியானது.

இதையடுத்து, துப்பாக்கியை வீட்டில் மறைத்து வைத்திருந்த அந்த மாணவரின் தாயாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாணவரின் தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டாா்.