பள்ளி மாணவர்களுக்காக ஆட்டோ வாங்கிய ஆசிரியர்! இது எங்கே?
பள்ளி மாணவர்களுக்காக ஆட்டோ வாங்கிய ஆசிரியர் பற்றிய தகவல்..

பல்வேறு கிராமங்களிலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவு நடந்து வரும் பள்ளி மாணவர்களின் தேவைக்காக, ஆசிரியரே நிதி திரட்டி, மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மாவட்டம், செம்ரி குர்த் பகுதியில் உள்ள அரசுத் துவக்கப்பள்ளியில் நாள்தோறும் வருகைப் பதிவு எடுக்கும்போது, ஏராளமான பிள்ளைகள் விடுப்பு எடுத்திருப்பார்கள்.
ஆசிரியர்கள் முன்முயற்சி செய்து, அனைத்து மாணவர்களின் வீட்டுக்கும் சென்று விசாரித்தபோது, நாள்தோறும் 5 முதல் 7 கிலோ மீட்டர் தொலைவு நடந்துதான் பள்ளிக்கு மாணவர்கள் வருவதாகவும், சில நாள்களில் கால் வலியால் அவதிப்பட்டு பள்ளிக்கு வர முடியாமல் போவது, மழை, வெய்யில் அதிகமாக இருந்தால் பள்ளிக்கு வர முடியாமல் போவது மற்றும் சில வேளைகளில் ஒரு மாணவர் விடுப்பெடுத்தால், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பெற்றோர் அவருடன் செல்லும் மற்ற மாணவர்களையும் பள்ளிக்கு அனுப்பாமல் தவிர்த்துவிடுவார்களாம்.
Advertisement
Advertisement
இதற்கு மாற்று வழி என்ன என்று அனைத்து கோணங்களிலும் முயன்ற பள்ளி ஆசிரியர், பல்வேறு தரப்பினரிடமும் நிதி திரட்டி, கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று அவர்களிடமும் நிதி பெற்று, சொந்த நிதியையும் சேர்த்து மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ ஒன்றை வாங்கிவிட்டாராம்.
இனி மாணவர்களை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்பிவிடலாம் என்பதால், எந்த மாணவரும் விடுப்பெடுக்காமல் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறார்களாம்.
ஒரு அரசுப் பள்ளியில், ஆசிரியரே இந்த அளவுக்கு முன்முயற்சி எடுத்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறாரே, ஒவ்வொரு மாநில அரசும் நினைத்தால் எத்தனை விஷயங்களை மாற்றலாம் என சமூக வலைத்தளங்களிலும், அந்தபள்ளியின் அக்கம் பக்கம் கிராமங்களிலும் பரவலாகப் பேசப்படுகிறதாம்.