அனுமதி மறுப்பு: தடையை மீறி பேரணி நடத்த காங்கிரஸ் முடிவு! லக்னௌவில் கார்கே பங்கேற்பு
அரசியலமைப்பு தின பேரணி பற்றி காங்கிரஸ் கூறுவது பற்றி..
உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான அரசு சம்விதான் ரக்ஷா சம்மேளனம் (அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு) பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி, தடையை மீறி பேரணியைத் தொடரப் போவதாகவும், தேவைப்பட்டால் கைதாகவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்திற்கான அகில இந்தியக் காங்கிரஸ் குழு பொறுப்பாளர் ராஜேந்திர பால் கௌதம் கூறுகையில்,
அரசியலமைப்பு தின நிகழ்வில் பங்கேற்பதற்காகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று லக்னௌ வருகை தருகிறார்.
Advertisement
Advertisement
அவர் லக்னௌ வந்தடைந்ததும், முதலில் அம்பேத்கர் மகாசபா வளாகத்திற்குச் சென்று பாபா சாஹேப் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவார். அதன்பிறகு, கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்வார்.
நிர்வாகம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம், இருப்பினும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் சம்விதான் ரக்ஷா சம்மேளனம் முடிந்ததும், பேரணிக்குத் தலைமை தாங்க மல்லிகார்ஜுன கார்கே தில்லி புறப்படுவார். அதேசமயம், கட்சியின் பிற தலைவர்கள் பேரணியைத் தொடர்ந்து நடத்துவார்கள். இந்தப் பேரணி ஹஸ்ரத்கஞ்சில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதோடு நிறைவடையும்.
கார்கே மிகவும் மதிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். அவர் தலைமை தாங்கவிருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது, இந்த அரசின் மனநிலையைத்தான் காட்டுகிறது. மேலும், மாநிலத் தலைநகரில் சமீபத்தில் பாஜக தலைவர் நிதின் நவீன் நடத்திய நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், காங்கிரஸுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது. அனுமதி விவகாரம் குறித்து அதிகாரிகள் தரப்பிலிருந்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராகத் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகக் காங்கிரஸ் கட்சியின் இந்த அரசியலமைப்பு பாதுகாப்பு பேரணி நடத்தப்படுகின்றன.
காங்கிரஸ் கட்சியின் திட்டப்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ள இந்தப் பேரணிகள், பி.ஆர். அம்பேத்கர் அல்லது மகாத்மா காந்தியின் சிலைகளுக்கு அருகில் தொடங்கி நிறைவடையும். அப்போது, இந்திய அரசியலமைப்பின் முகவுரை வாசிக்கப்பட்டு, அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழி ஏற்கப்படும்.
நிகழ்ச்சிகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கார்கே வருகையின்போது அவருக்குப் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படும் என்று கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்தார்.