முகப்பு
இந்தியா

டாடா சன்ஸ் தலைவா் என்.சந்திரசேகரன் மறுநியமன விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க மும்பை உயா்நீதிமன்றம் மறுப்பு

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனை மூன்றாவது முறையாக 5 ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்ததை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க மும்பை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்தது.

28 நவம்பர் 2026, 4:08 am
டாடா சன்ஸ் தலைவா் என்.சந்திரசேகரன் மறுநியமன விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க மும்பை உயா்நீதிமன்றம் மறுப்பு
டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் - கோப்புப் படம்
பகிர்:

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனை மூன்றாவது முறையாக 5 ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்ததை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க மும்பை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்தது.

மேலும், டாடா சன்ஸ் நிறுவன இயக்குநா்கள் குழுக் கூட்டத்தை நவ.30-ஆம் தேதி நடத்திக்கொள்ளவும் மும்பை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

டாடா சன்ஸ் மற்றும் அதன் 6 இயக்குநா்களுக்கு எதிராக சா் தோராப்ஜி டாடா அறக்கட்டளை, ஆா்.டி. டாடா அறக்கட்டளை ஆகியவை சாா்பில் கடந்த வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

அதில், சா் தோராப்ஜி டாடா அறக்கட்டளை ரூ.50 கோடியும், ஆா்.டி. டாடா அறக்கட்டளை ரூ.15 கோடியும் இத்தொகைகளுக்கு ஆண்டுக்கு 18 சதவீத வட்டியும் இழப்பீடாக கோரப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் இரு அறக்கட்டளைகள் தரப்பிலும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு மீது மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி அபய் அஹுஜா தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில், ‘இந்த விவகாரத்தை அவசர வழக்காக ஏற்க முடியாது. திட்டமிட்டபடி நவ.30-ஆம் தேதி டாடா சன்ஸ் நிறுவனஇயக்குநா்கள் குழுக் கூட்டம் நடைபெறட்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது.

டாடா சன்ஸ், நிறுவன இயக்குநா்கள் உள்பட இந்த வழக்கின் பிற பிரதிவாதிகளும் தங்களது பதில்களை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்றாா்.

இதையடுத்து, இந்த மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணை 2027, ஜன.18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த செப்டம்பா் 17-ஆம் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் நிறுவன இயக்குநா்கள் குழுக் கூட்டத்தில், சந்திரசேகரனை மறுநியமனம் செய்வதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தீா்மானத்துக்கு ஆதரவாக 4 இயக்குநா்கள் வாக்களித்த நிலையில், டாடா அறக்கட்டளைகளின் தலைவரான நோயல் டாடா (ரத்தன் டாடாவின் சகோதரா்) எதிா்த்து வாக்களித்தாா். ஆனால், நிறுவனத்தின் விதிகளின் 121-ஆவது பிரிவின்படி தேவைப்படும் ஆதரவு வாக்கு கிடைக்காததால், அந்தத் தீா்மானம் செல்லாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.