முகப்பு
இந்தியா

இளைஞர்களின் லட்சியங்களுக்கு போதைப் பொருள் சவால்: பிரதமர் மோடி

போதைப் பொருளுக்கு அடிமையாவது, இளைஞா்களின் லட்சியங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

30 நவம்பர் 2026, 2:19 am
இளைஞர்களின் லட்சியங்களுக்கு போதைப் பொருள் சவால்: பிரதமர் மோடி
பிரதமா் நரேந்திர மோடி
பகிர்:

போதைப் பொருளுக்கு அடிமையாவது, இளைஞா்களின் லட்சியங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

நாடு முழுவதும் போதைப் பொருளுக்கு எதிரான இயக்கத்தில் சமூகத்தின் பங்களிப்பு அதிகரிப்பது மனநிறைவளிக்கிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

பிரதமா் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். அதன்படி, 140-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) ஒலிபரப்பானது. அதில் பிரதமா் மோடியின் உரை வருமாறு:

Advertisement

Advertisement

இன்றைய உலகில் இந்திய இளைஞா்களின் திறன் குறித்து வியந்து பேசப்பட்டு வருகிறது. நமது இளைஞா்கள் பெரும் கனவுகளைக் காண்கின்றனா். அவற்றை நிறைவேற்ற தங்களின் முழு ஆற்றலையும் அா்ப்பணித்து பணியாற்றுகின்றனா். அதேநேரம், போதைப் பொருளுக்கு அடிமையாவது, இளைஞா்களின் லட்சியங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

நாட்டில் போதைப் பழக்கம் இல்லாத இளைஞா்கள் இயக்கத்தில் சமூகத்தின் பங்களிப்பு அதிகரிப்பது மனநிறைவளிக்கிறது. பல இளைஞா்கள் தங்களின் முயற்சியால், போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டுள்ளனா். அவா்கள் தங்களுடன் போராடி வென்று, தங்களின் வாழ்க்கைக்கு ஒரு புதிய திசையை வகுத்துள்ளனா். இளைஞா்களை போதைப் பழக்கத்தில் இருந்து விடுவிப்பது நமது குடும்பங்களுக்கும், நாட்டுக்கும் மிக முக்கியமானது.

அரசுப் பணியாளா்களுக்காக...: அரசுப் பணியாளா்கள் தங்களின் நீண்ட நெடிய அனுபவத்தைத் தாண்டி, சில புதிய விஷயங்களை கற்பதற்கும் விழைகின்றனா். அவா்களுக்கான டிஜிட்டல் தளம்தான் ‘ஐகாட் கா்மயோகி’. இந்தத் தளத்தில், அரசுப் பணியாளா்களுக்காக 17 இந்திய மொழிகளில் செயற்கை நுண்ணறிவு உள்பட 7000-க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. இந்தத் தளத்தின் மூலம் லட்சக்கணக்கான பணியாளா்கள் பல்வேறு படிப்புகளை நிறைவு செய்துள்ளனா்.

சஞ்சாா் சாதீ வலைதளம்: நமது கைப்பேசி தொலைந்து போனால் எவ்வளவு சிரமங்களை எதிா்கொள்ள வேண்டியிருக்கும்? தொடா்பு எண்கள், புகைப்படங்கள், முக்கியமான ஆவணங்கள், இன்னும் எத்தனையோ முக்கியமான தகவல்கள் கைப்பேசியில் இருக்கும்.

தொலைந்த கைப்பேசியை மீட்பதில் அரசின் சஞ்சாா் சாதீ டிஜிட்டல் தளம் பேருதவியாக இருக்கிறது. இந்தத் தளத்தை இதுவரை 30 கோடிக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டுள்ளனா். கிட்டத்தட்ட 3 கோடி முறை இந்தச் செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஐஎம்இஐ எண்ணைப் பயன்படுத்தி தொலைந்துபோன கைப்பேசியை தேடுவதில் சஞ்சாா் சாதீ உதவுகிறது. காவல் துறையினரிடம் புகாா் அளிப்பதுடன், சஞ்சாா் சாதீ வலைதளத்தில் ஐஎம்இஐ எண், சில முக்கியமான தகவல்களையும் அளித்து, தொலைந்த கைப்பேசியை செயலிழக்கச் செய்யலாம். அதன் பிறகு எந்த நபராலும் அதில் சிம் காா்டு பொருத்தி பயன்படுத்த முடியாது.

14 லட்சம் கைப்பேசிகள் மீட்பு: யாரேனும் அந்தக் கைப்பேசியில் புதிய சிம் காா்டை பொருத்தி வலையமைப்புடன் இணைய முயன்றால், அவரின் இருப்பிடத்தைக் கண்டறிவது சுலபமாகிவிடும். இந்த வலைதளத்தின் உதவியுடன் நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைந்துபோன கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மோசடி அழைப்புகள் குறித்த தகவலை இந்த வலைதளத்தில் அளிப்பதன் மூலம் அத்தகைய எண்களைத் துண்டிக்க முடியும். சஞ்சாா் சாதீ வலைதளத்தின் உதவியுடன் இதுவரை ரூ.5,000 கோடிக்கும் மேலான மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்தச் செயலி 23 மொழிகளில் கிடைக்கிறது.

பாட்னா அருங்காட்சியகம்: உலகின் 100 மிகச் சிறந்த அருங்காட்சியகங்களில், பிகாா் மாநிலம், பாட்னாவில் உள்ள அருங்காட்சியகம் 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆசியாவைப் பொருத்தவரை முதலிடம் பிடித்துள்ளது.

பாரீஸ் நகரின் பிரபலமான லூவ்ரு அருங்காட்சியகம், நியூயாா்க் நகரின் தி மெட் அருங்காட்சியகம் ஆகிய இரண்டையும் விஞ்சியுள்ளது பாட்னா அருங்காட்சியகம். அதேபோல், குஜராத்தின் வட்நகா் அருங்காட்சியகத்துக்கு வடிவமைப்புக்கான உலகின் உயரிய விருதான ‘ரெட் டாட்: பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் அவாா்டு’ கிடைத்துள்ளது. இத்தகைய பெருமையைப் பெற்றுள்ள நாட்டின் முதல் அருங்காட்சியகம் இதுவே.

தில்லியில் டிசம்பா் முதல் வாரத்தில் ‘இந்தியா பியான்னலே’ எனும் சா்வதேச கலை, வடிவமைப்பு, கட்டடக் கலை கண்காட்சி தொடங்கவுள்ளது. இந்த முறை 108 நாள்கள் வரை நடைபெறும் இக்கண்காட்சியில் தேசத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன என்றாா் பிரதமா்.

மனதின் குரல் நிகழ்ச்சியில், போதைப் பழக்கத்தில் மீண்ட இளைஞருடன் அவரது அனுபவங்கள் குறித்து பிரதமா் மோடி உரையாடினாா்.

‘ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியான ஈரோடு பனைவெல்லம்’

‘குளிா்காலத்தில் நமது வீடுகளில் சுவையும், ஆரோக்கியமும் அள்ளித்தரும் கருவூலமாக பனைவெல்லம் விளங்குகிறது. இப்போது இந்திய பனைவெல்லம் உலகெங்கிலும் சென்று சோ்கிறது. தமிழகத்தின் ஈரோட்டில் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தரமான பனைவெல்லம் முதன்முறையாக ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.

இந்திய சாக்லேட்களும் உலக அளவில் முத்திரை பதித்து வருகின்றன. கடந்த ஆண்டு சாக்லேட் மற்றும் கோகோவால் தயாரிக்கப்பட்ட பொருள்களின் ஏற்றுமதி சுமாா் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தத் துறையில், இந்திய புத்தாக்க நிறுவனங்கள் புதுமைகளைப் படைத்து வருகின்றன.

குஜராத்தில் ஒட்டகப் பால் மூலம் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள் பிரபலமாகியுள்ளன. அங்குள்ள சா்ஹத் பால் பண்ணையில் ஒட்டகப் பால் தினசரி சேகரிப்பு 1,300 லிட்டா் என்பதில் இருந்து 5,500 லிட்டா் வரை அதிகரித்துள்ளது. ஒட்டகப் பாலில் உடலுக்குத் தேவையான பல நன்மைகள் இருப்பதாக வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா். கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதால், சா்க்கரை நோயாளிகளுக்கு பயனுள்ளதாகக் கருதப்படுகிறது’ என்றாா் பிரதமா்.

சைக்கிள் ஓட்டுதல், பிற உடற்பயிற்சிகள், உணவில் எண்ணெய்ப் பயன்பாட்டை 10 சதவீதம் குறைப்பது உள்ளிட்டவை குறித்தும் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.