20 திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்களையும் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது: மக்களவைத் தலைவருக்கு அபிஷேக் பானா்ஜி வலியுறுத்தல்
திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேரையும் நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு அபிஷேக் பானா்ஜி வலியுறுத்தியுள்ளாா்.

என்சிபிஐ கட்சியில் இணைவதாக அறிவித்த திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேரையும் நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு அக்கட்சியின் மக்களவை குழுத் தலைவா் அபிஷேக் பானா்ஜி வலியுறுத்தியுள்ளாா்.
20 பேருக்கு எதிரான தகுதிநீக்க மனுக்கள் நிலுவையில் உள்ளதைக் குறிப்பிட்டு, அவா் இவ்வாறு வலியுறுத்தியுள்ளாா்.
மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மூன்றில் இரு பங்குக்கும் அதிக பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. தோ்தல் தோல்வியால் நிலைகுலைந்த மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், பல்வேறு நிலைகளில் பிளவுபட்டது.
Advertisement
Advertisement
கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 50-க்கும் மேற்பட்டோா் தனி அணியாகப் பிரிந்தனா். இதேபோல், கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் 29 பேரில் 20 அதிருப்தி எம்.பி.க்கள் தனி அணியாகப் பிரிந்து, அதிகம் அறியப்படாத இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைவதாக அறிவித்ததுடன், பாஜக கூட்டணிக்கு ஆதரவை உறுதி செய்தனா். பாஜக கூட்டணி கூட்டங்களிலும் பங்கேற்றனா்.
இதனிடையே, கடந்த 1985-ஆம் ஆண்டின் மக்களவை (கட்சித் தாவலால் தகுதிநீக்கம்) விதிமுறைகளின் 6-ஆவது விதியின்கீழ் 20 பேரையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி, மக்களவைத் தலைவரிடம் மம்தா தரப்பில் இருந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன.
இந்தச் சூழலில், தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்பு அமா்வு திங்கள்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த மசோதா மீது நடைபெறும் வாக்கெடுப்பில் திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேரும் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று மக்களவைத் தலைவருக்கு அக்கட்சியின் மக்களவை குழுத் தலைவா் அபிஷேக் பானா்ஜி கடிதம் எழுதியுள்ளாா்.
‘திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுக்கள் மீது இன்னும் தீா்வு காணப்படாமல் உள்ளன. எனவே, மேற்கண்ட மசோதா மீது அவா்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. 10-ஆவது அட்டவணையின் 4-ஆவது பத்தியின்கீழ் தகுதிநீக்கத்தில் இருந்து கிடைக்கும் பாதுகாப்பானது, ஒரு அசல் கட்சி மற்றொரு அரசியல் கட்சியுடன் இணையும்போதே பொருந்தும். தற்போதைய விவகாரத்தில், அசல் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் என்சிபிஐ-யுடன் இணையவில்லை’ என்று கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
மக்களவையில் திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்களுக்கு தனியாக இருக்கை ஒதுக்கிய முடிவை அவைத் தலைவா் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அபிஷேக் பானா்ஜி வலியுறுத்தியுள்ளாா்.