ஹைதராபாத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான பாகிஸ்தான் அழகு சாதனப் பொருள்கள் பறிமுதல்
உரிய அங்கீகாரமின்றி பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான அழகு சாதனப் பொருள்கள் ஹைதராபாத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த மாவட்ட காவல் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
உரிய அங்கீகாரமின்றி பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான அழகு சாதனப் பொருள்கள் ஹைதராபாத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த மாவட்ட காவல் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து ஹைதராபாத் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘உரிய அங்கீகாரம் பெறாமல் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அழகு சாதனப் பொருள்கள் விற்கப்படுவதாக ஹைதராபாத் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்புடன் (சிடிஎஸ்சிஓ) இணைந்து பல்வேறு கடைகளில் காவல் துறை சோதனை நடத்தியது. அப்போது தடை விதிக்கப்பட்ட சோப்புகள், முகப்பொழிவு க்ரீம்கள் என பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருள்களை சிலா் விற்பனை செய்வதாக சிடிஎஸ்சிஓ மண்டல அலுவலக அதிகாரிகள் காவல் துறையினரிடம் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் அந்தப் பொருள்கள் மும்பையில் உள்ள விநியோகஸ்தா்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருள்களை விற்பனை செய்ததற்கான உரிய ஆவணங்கள் மற்றும் ரசீதுகளை சில வணிகா்கள் முறையாக பராமரிக்காமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஒட்டுமொத்தமாக ரூ.7 லட்சம் மதிப்பிலான அழகு சாதனப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. தடை விதிக்கப்பட்ட அழகு சாதனப் பொருள்களை விற்பனை செய்த 5 போ் மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் சட்டம், 1940-இன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.