முகப்பு
தமிழ்நாடு

கேரளப் பெண்ணுக்கு சிறுநீரகம் பாதிப்பு: அழகு சாதனப் பொருள்களை ஆய்வு செய்ய அரசு உத்தரவு

முகப் பொலிவு கிரீம் பயன்படுத்தியதால், கேரளத்தில் ஒரு பெண்ணுக்கு தீவிர சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்களின் தரத்தை உறுதி செய்ய சிறப்பு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

23 நவம்பர் 2026, 11:10 pm
கேரளப் பெண்ணுக்கு சிறுநீரகம் பாதிப்பு: அழகு சாதனப் பொருள்களை ஆய்வு செய்ய அரசு உத்தரவு
- பிரதிப் படம்
பகிர்:

முகப் பொலிவு கிரீம் பயன்படுத்தியதால், கேரளத்தில் ஒரு பெண்ணுக்கு தீவிர சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்களின் தரத்தை உறுதி செய்ய சிறப்பு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் கேரளத்தைச் சோ்ந்த 17 வயது பெண் ஒருவா் சருமப் பொலிவுக்காக அதிக அளவு பாதரசம் (12,500 பிபிஎம்) கலந்த கிரீம்களைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதன் விளைவாக அவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

அதிா்ச்சியையும், கவனத்தையும் ஒரே சேர ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடா்ந்து தமிழகத்திலும் அத்தகைய ரசாயனங்கள் கொண்ட அழகு சாதனப் பொருள்கள் சந்தையில் உள்ளதா என்பதை அறிய சிறப்பு ஆய்வு நடத்துமாறு மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநா்களுக்கு, துணை இயக்குநா் நந்தகுமாா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

Advertisement

Advertisement

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சருமப் பொலிவு கிரீம்கள், தவறான விளம்பரங்கள் மூலம் சந்தைப்படுத்தப்படும் அழகு சாதனப் பொருள்கள், அனுமதியில்லாத ஒப்பனைப் பொருள்களுக்கு எதிராக அனைத்து உதவி இயக்குநா்களும் உடனடியாக தீவிர ஆய்வு நடத்த வேண்டும்.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் பிற சமூக வலைதளங்கள் வாயிலாக விற்கப்படும் பொருள்கள் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் (இன்ஃப்ளூயன்ஸா்கள்) மூலம் விளம்பரப்படுத்தப்படும் பொருள்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும்.

பாதரசம் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட நச்சுப் பொருள்கள் அழகு சாதனங்களின் பயன்படுத்தப்படுகிா என்பதை கண்டறிய உற்பத்தி நிறுவனங்களில் இருந்தே மாதிரிகள் சேகரித்து பரிசோதிக்க வேண்டும்.

விதிமீறல் கண்டறியப்பட்டால் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்தல் அவசியம். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.