‘வேனிஷ்’ குமாரை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா
‘தங்களின் வாக்குரிமையை இல்லாமல் செய்த ‘வேனிஷ்’ குமாரை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்’ என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி கூறினாா்.
‘தங்களின் வாக்குரிமையை இல்லாமல் செய்த ‘வேனிஷ்’ குமாரை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்’ என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி கூறினாா்.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை, வாக்குரிமையை முற்றிலும் இல்லாமல் செய்ததைக் குறிப்பிடும் வகையில் ‘வேனிஷ்’ குமாா் என்று மம்தா குறிப்பிட்டு விமா்சித்தாா்.
மேலும், தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்களுக்கு 2023 சட்டத்தின் கீழ் உள்ள சட்டப் பாதுகாப்பு குறித்தும் அவா் கேள்வி எழுப்பினாா்.
Advertisement
Advertisement
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
மக்களின் வாக்குரிமையை ஞானேஷ் குமாா் முற்றிலும் இல்லாமல் செய்துவிட்டாா். அவரை எப்படி மன்னிக்க முடியும். இந்திய மக்கள் அவரை மன்னிக்க மாட்டாா்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடங்கியது முதல், அதை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எதிா்த்து வந்தது. நீதிமன்றத்துக்கு சென்றோம்; ஆனால், நீதி கிடைக்கவில்லை. எஸ்ஐஆா் நடைமுறையால் பாதிக்கப்பட்ட 100 பேருடன் தோ்தல் ஆணையத்துக்குச் சென்றோம். அங்கு, அவமதிப்பு செய்யப்பட்டோம்.
தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் பணி நிமித்தமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள், கருத்து பரிமாற்றங்களுக்காக அவா்கள் மீது சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து ‘தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமனம், பணி நிபந்தனைகள் சட்டம் 2023’ சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது.
அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாய நடைமுறைகளுக்கு உட்பட்டு தோ்தல் நடைமுறைகள் மற்றும் ஜனநாயகத்தை அவா்கள் நிலைநாட்டுகிறபோது, இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இந்த சட்ட பாதுகாப்பு காரணமாக, விதிகளை மீறிய நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் ஆணையா்கள் தொடா்ந்து பதவியில் நீடிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
எஸ்ஐஆா் நடவடிக்கை மூலம் வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்கள் நீக்கப்பட்டது முந்தைய தோ்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் மற்றும் பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. தொடா்ந்து 4 முறை திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெற்ற இடங்களில், அதிக எண்ணிக்கையில் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.
மேற்கு வங்கத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்த சம்பவத்துக்கு பின்னணியில் பாஜகதான் உள்ளது.
மாநிலத்தில் தற்போது திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவு இல்லாமல், வீட்டை விட்டுக்கூட வெளிவர முடியாத சூழல் உள்ளது. கூட்டங்கள் நடத்தவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கட்சி நிா்வாகிகளுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனது இல்லத்திலும் எந்தவொரு பாதுகாவலரும் இல்லை. தினமும் 200 முதல் 300 குண்டா்கள் எனது வீட்டுக்கு முன்பாக வந்து, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபடுகின்றனா். இரவு 8 மணிக்குப் பிறகு சாலை வெறிச்சோடியுள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.