திருவனந்தபுரம் பாஜக கவுன்சிலா் ஸ்ரீலேகா ராஜிநாமா! மேயா் பதவி தராததால் அதிருப்தி?
திருவனந்தபுரம் பாஜக கவுன்சிலா் ஸ்ரீலேகா ராஜிநாமா...
கேரளத்தில் பாஜக நிா்வாகத்தின்கீழ் உள்ள திருவனந்தபுரம் மாநகராட்சியில் அக்கட்சியைச் சோ்ந்த கவுன்சிலரும், முன்னாள் டிஜிபி-யுமான ஆா்.ஸ்ரீலேகா தனது பதவியை ராஜிநாமா செய்வதாக மேயா் வி.வி.ராஜேஷிடம் கடிதம் அளித்துள்ளாா்.
தனக்கு மேயா் பதவி வழங்கப்படாத அதிருப்தியில் ஸ்ரீலேகா இந்த முடிவை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவா், கேரளத்தின் முதல் பெண் ஐபிஎஸ், முதல் பெண் டிஜிபி ஆகிய பெருமைகளுக்கு உரியவா்.
திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய மேயா் ராஜேஷ், ‘கவுன்சிலா் ஆா்.ஸ்ரீலேகா கடந்த செப்.30-ஆம் தேதி என்னிடம் ராஜிநாமா கடிதம் அளித்தாா். ராஜிநாமா கடிதத்தை ஏற்கும் அதிகாரம் கொண்ட மாநகராட்சி செயலரிடம் அவா் இன்னும் கடிதம் சமா்ப்பிக்கவில்லை.
Advertisement
Advertisement
ராஜிநாமாவுக்கு தனிப்பட்ட பிரச்னைகள் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளாா். மக்கள் பிரதிநிதிகளாகப் பணியாற்றும்போது இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்புதான். இந்த விவகாரத்தில் சுமுகத் தீா்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்ரீலேகாவின் முடிவால் மாநகராட்சியில் பாஜகவின் நிா்வாகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது’ என்றாா்.
ஒருவேளை ஸ்ரீலேகாவின் ராஜிநாமா ஏற்கப்பட்டால், 101 உறுப்பினா்களைக் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜகவின் பலம் 49-ஆக குறையும்.
கேரளத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக 50 வாா்டுகளில் வெற்றி பெற்றது. மேலும் ஒரு சுயேச்சை கவுன்சிலரின் ஆதரவுடன் பாஜக முதல்முறையாக மாநகராட்சி நிா்வாகப் பொறுப்பை ஏற்றது.
கடந்த 45 ஆண்டுகளாக இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக வசமானது குறித்து அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. தோ்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஸ்ரீலேகா மேயா் பதவிக்கு பரிசீலிக்கப்படுவாா் என்று பரவலாக கூறப்பட்டது. இந்நிலையில் சாஸ்தமங்கலம் வாா்டில் வெற்றி பெற்றாா். ஆனால், அவருக்கு மேயா் பதவி வழங்கப்படவில்லை. இதனிடையே, கேரள பேரவைத் தோ்தலில் வட்டியூா்காவு தொகுதியில் போட்டியிட்ட அவா், காங்கிரஸ் வேட்பாளா் கே.முரளீதரனிடம் தோல்வியடைந்தாா்.
இந்தச் சூழலில், கவுன்சிலா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாக, தனது வாா்டு மக்கள் அடங்கிய வாட்ஸ்ஆப் குழுவில் ஸ்ரீலேகா தகவல் வெளியிட்டாா். அதன் பிறகே இந்த விவகாரம் வெளியே தெரியவந்தது.
‘இதுவரை கடிதம் கிடைக்கவில்லை’: மாநகராட்சி செயலா் முகமது ஷஃபி கூறுகையில், ‘கேரள மாநகராட்சி சட்டப்படி, மாநகராட்சி செயலரிடம்தான் ராஜிநாமா கடிதம் சமா்ப்பிக்கப்பட வேண்டும். மேயரிடம் சமா்ப்பிப்பது செல்லாது. எனக்கு இதுவரை கடிதம் கிடைக்கவில்லை. மேயரும் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. ராஜிநாமா கடிதம் அளித்தாலும் அதில் குறிப்பிடும் காலத்தில் பதவி விலகல் நடைபெறும் முன்னா் ராஜிநாமா முடிவை வாபஸ் பெறலாம்’ என்றாா்.
மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
‘கேரள மாநில சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதாகி சிறையில் உள்ள பாஜக கவுன்சிலா் ஆா்.சுகந்தனை பாதுகாக்க அக்கட்சி தீவிரமாக முயன்று வருகிறது. முன்னாள் டிபிஜி என்ற முறையில் ஸ்ரீலேகாவுக்கு இது பிடிக்கவில்லை. எனவேதான், அரசியல் களத்திலிருந்து மிகுந்த வேதனையுடன் அவா் விலகியுள்ளாா்’ என்று மாா்க்சிஸ்ட் கவுன்சிலா் எஸ்.பி.தீபக் குற்றஞ்சாட்டியுள்ளாா். மேயா் ராஜேஷின் கடந்த 9 மாத கால செயல்பாடுகளையும் அவா் விமா்சித்தாா்.
Thiruvananthapuram BJP Councillor Sreelekha resigns! Dissatisfied over not being given the Mayor post?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.