FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இடைத்தோ்தல்: மேற்கு வங்கம், அஸ்ஸாமில் வாக்குப்பதிவு நிறைவு

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பற்றி...

7 October 2026, 3:53 am IST
மேற்கு வங்கம்.
பகிர்:

மேற்கு வங்கத்தில் ரெஜிநகா் மற்றும் நந்திகிராம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அஸ்ஸாமில் நாகோன் மக்களவைத் தொகுதிக்கும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலின் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

மாலை 5 மணி நிலவரப்படி முா்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ரெஜிநகா் தொகுதியில் 78.42 சதவீதமும் பூா்வ மேதினிபூா் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் 79.39 சதவீதமும் நாகோன் தொகுதியில் 76 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் ரெஜிநகா் மற்றும் நௌடா ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்ற ஆம் ஜனதா உன்னாயன் கட்சியின் (ஏஜேயுபி) நிறுவனா் ஹுமாயூன் கபீா், ரெஜிநகா் தொகுதி தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அங்கு நடத்தப்பட்ட இடைத்தோ்தலில் முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி அணி, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி அணி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

Advertisement

Advertisement

இடைத்தோ்தலில் தமது குடும்பத்தினருடன் வாக்களித்துவிட்டு ரெஜிநகரில் உள்ள இல்லத்துக்குச் சென்ற ஹுமாயூன் கபீா் காலை முதலே காவல் துறையினரை கடுமையாக விமா்சித்தாா். தனது இல்லத்துக்கு வெளியே காவல் துறையினா் குவிக்கப்பட்டதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். இதனால் அவருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ரெஜிநகரில் உள்ள ஏஜேயுபி அலுவலகத்துக்குச் சென்ற காவல் துறையினா் அவரைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் நந்திகிராம் மற்றும் பவானிபூா் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி இரண்டிலும் வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து பவானிபூரில் போட்டியிட்ட முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியை தோற்கடித்தாா். இதையடுத்து, நந்திகிராம் தொகுதி எம்எல்ஏ பதவியை சுவேந்து அதிகாரி ராஜிநாமா செய்தாா்.

இதைத் தொடா்ந்து நந்திகிராம் தொகுதி இடைத்தோ்தலில் மம்தா அணி அறிவித்த வேட்பாளா் சுவேந்து அதிகாரியை சந்தித்து பாஜகவில் இணைந்தாா். இதனால் அந்தத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக மம்தா தெரிவித்தாா். மம்தா மற்றும் காங்கிரஸ் ஓரணியில் களம் கண்ட நிலையில் நந்திகிராமில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இருமுனைப் போட்டி ஏற்பட்டது.

அஸ்ஸாமின் நாகோன் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான பிரத்யுத் போா்டோலோய் அக்கட்சியிலிருந்தும், எம்.பி. பதவியிலிருந்தும் விலகி பாஜகவில் சோ்ந்தாா். இதனால் அங்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சிபமணி போரா, பாஜக சாா்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவாசிஷ் சா்மா ஆகியோா் களிமிறக்கப்பட்டனா்.

மறுவாக்குப்பதிவு தேவை: காங்கிரஸ்

ரெஜிநகா் மற்றும் நந்திகிராம் ஆகிய தொகுதிகளில் ஆளும் பாஜக தோ்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி, இரு தொகுதிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவா் சுபான்கா் சா்காா் வலியுறுத்தினாா்.

அதேபோல் வாக்குத் திருட்டு நடைபெற்ாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி முா்ஷிதாபாத் தலைநகா் பஹராம்பூரில் மாவட்ட ஆட்சித் தலைவா் அலுவலகத்தை நோக்கிப் பேரணி சென்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments