சிஜேபி போராட்டம்! தில்லி செல்லும் 38 ரயில்கள் ரத்து!
புது தில்லி மற்றும் ஹஜ்ரத் நிசாமுதீன் ரயில் நிலையங்களுக்குச் செல்லும் 38 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து...
புது தில்லி மற்றும் ஹஜ்ரத் நிசாமுதீன் ரயில் நிலையங்களுக்குச் செல்லும் 38 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை (அக்.10) தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக் கருதப்படுவதால் சுற்றியுள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து புது தில்லி மற்றும் ஹஜ்ரத் நிசாமுதீன் ரயில் நிலையங்களுக்கு நாளை அதிகாலை 4 மணி முதல் மதியம் 2 மணிக்குள் சென்றடையும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே துறை அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
ரயில்வே துறையின் இந்த நடவடிக்கை இளைஞர்களின் போராட்டத்தை முடக்கும் முயற்சி எனக் கூறி சிஜேபி உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், புது தில்லி மற்றும் ஹஜ்ரத் நிசாமுதீன் ரயில் நிலையங்களுக்குச் செல்லும் 38 ரயில்கள் மட்டுமே ரத்து செய்யப்படுவதாக, வடக்கு ரயில்வே இன்று (அக். 9) விளக்கமளித்துள்ளது.
இதுபற்றி, வடக்கு ரயில்வே செய்தித்தொடர்பாளர் ஹிமான்ஷு சேகர் உபத்யாய் கூறுகையில்,
“அதிகாலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரையில் 165 ரயில்கள் புது தில்லி மற்றும் ஹஜ்ரத் நிசாமுதீன் ரயில் நிலையங்களுக்குச் சென்றடைகின்றன. இவற்றில், இந்த ரயில் நிலையங்களைச் சுற்றி ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 38 ரயில்கள் மட்டுமே அக்டோபர் 10 ஆம் தேதியன்று ரத்து செய்யப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மகத் எக்ஸ்பிரஸ், ராஜேந்திர நகர் - புது தில்லி தேஜஸ் ராஜதானி எக்ஸ்பிரஸ், சம்பூர்னா கிராந்தி எக்ஸ்பிரஸ், ராஜேந்திர நகர் - புது தில்லி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 38 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Northern Railway has announced the cancellation of 38 trains bound for New Delhi and Hazrat Nizamuddin railway stations.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.