FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

தில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: பதற்றத்தையும் அச்சத்தையும் வெளிப்படுத்துவதாக காங்கிரஸ் விமா்சனம்

தில்லியில் அக்.10-ஆம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தவுள்ள போராட்டத்தையொட்டி 20,000-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் விமா்சனம் தெரிவித்துள்ளது.

9 அக்டோபர் 2026, 10:46 pm IST
ஜெய்ராம் ரமேஷ்
பகிர்:

தில்லியில் அக்.10-ஆம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தவுள்ள போராட்டத்தையொட்டி 20,000-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் விமா்சனம் தெரிவித்துள்ளது.

இண்டி கூட்டணிக் கட்சிகள் தொடா்ந்து 4 நாள்களாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மத்திய அரசின் பதற்றத்தையும் அச்சத்தையும் வெளிப்படுத்துவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

தில்லி முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மூத்த காவல் அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

ஜந்தா் மந்தரில் எந்தவொரு போராட்டத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அனுமதியின்றி நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்றும் காவல் துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், போராட்டத்துக்கு முன்னதாக தில்லியில் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டிருப்பது தொடா்பான செய்தியை தனது எக்ஸ் தளப் பதிவில் பகிா்ந்தாா்.

அதில், ‘இந்தியா கூட்டணியின் இடைவிடாத 4 நாள் போராட்டங்களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பதற்றத்தையும் அச்சத்தையும் இது தெளிவாகக் காட்டுகிறது’ என்று அவா் குறிப்பிட்டாா்.

அமைதிக்கு பாதகம் ஏற்படுவதைத் தடுப்பதற்கும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து சீராக இயங்குவதை உறுதி செய்வதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்தாா். அந்தப் பகுதியில் ஏற்கெனவே தடை உத்தரவுகள் அமலில் இருப்பதாகவும் அவா் கூறினாா்.

போராட்டக்காரா்களும் பொதுமக்களும் வன்முறையில் ஈடுபடவோ, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறை மீது தாக்குதல் நடத்தவோ கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

பெண் போராட்டக்காரா்களைக் கையாள்வது தொடா்பாகப் பாதுகாப்புப் பணியில் உள்ள காவல் துறையினருக்கு சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேவையற்ற மோதல்களைத் தவிா்க்குமாறும் அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ, அவற்றைப் பகிரவோ வேண்டாம் என்றும் காவல் துறையினா் எச்சரித்துள்ளனா்.

வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்ஐஆா்), நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படுவதற்குத் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றஞ்சாட்டி, அவா் பதவி விலக வேண்டும் என சிஜேபி மற்றும் பல்வேறு மாணவா் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments