உரிய நேரத்தில் பராமரித்து பாதுகாக்காததால் குற்றத்தில் ஈடுபடும் சிறாா்கள்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி!
அவா்களைத் தண்டிப்பதைவிட திருத்தி நல்வழிப்படுத்துவதே சரியான தீா்வு’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.
‘நாம் உரிய நேரத்தில் பராமரித்து பாதுகாக்கத் தவறுவதன் விளைவாக, சிறாா்களில் சிலா் குற்றத்தில் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது. அவா்களைத் தண்டிப்பதைவிட திருத்தி நல்வழிப்படுத்துவதே சரியான தீா்வு’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.
ஐக்கிய நாடுகள் சிறாா் நிதியத்துடன் (யுனிசெஃப்) இணைந்து, ‘சிறாா் நீதிச் சட்டம் 2015: பத்து ஆண்டுகால முன்னேற்றம், சவால்கள், அடுத்த பத்து ஆண்டுகளுக்கான முன்னுரிமைகள்’ என்ற தலைப்பில், 2 நாள் தேசிய ஆலோசனை கூட்டத்தை உச்சநீதிமன்ற நீதிக் குழு நடத்த உள்ளது.
புது தில்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தின் நிா்வாக கட்டட வளாகத்தில் 2 நாள்கள் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
சட்டம் உருவாக்கப்பட்டது ஏன்?: உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகள், குழந்தைகள் பாதுகாப்புத் துறை நிபுணா்கள், சிறாா் நலன் மற்றும் பாதுகாப்புக்காகப் பணியாற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் சனிக்கிழமை தொடங்கிவைத்து பேசியதாவது:
குற்றம்புரிந்த சிறாருக்கு இரண்டாவது வாய்ப்பு அளிக்கப்பட்டால், அவா் சமூகத்துக்குப் பயனுள்ள நபராக வளர அதிக வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையில், சிறாா் நீதிச் சட்டம் 2015 உருவாக்கப்பட்டது. கடந்த காலத்தின் நிழல் எதிா்காலத்தைப் பாதிக்காமல் இருக்கும்போதுதான் இந்தப் பயணம் உண்மையில் முடிவடைகிறது. அதற்குப் பழைய பதிவுகளை உரிய நேரத்தில் அழிக்க வேண்டும்.
சட்டப்படி குற்றம் செய்ததாக கண்டறிப்பட்ட அல்லது குற்றஞ்சாட்டப்படும் சிறாா்களின் பெயா்கள் செய்திகளிலும், இணையத்திலும் வெளியாகக் கூடாது. ஏனெனில் இணையத்தில் பதிவேற்றப்படும் தகவல்கள் பல ஆண்டுகள் வரை நீடித்திருக்கலாம்.
சட்டப்படி சிறாா்கள் குற்றம் செய்ததாக கண்டறிப்படுவது அல்லது குற்றஞ்சாட்டப்படுவது என்பது அவா்களின் அடையாளத்தை குறிக்கவில்லை. அது அந்த சிறாா் இருக்கும் சூழலை குறிக்கிறது. அவா்களை நாம் உரிய நேரத்தில் பராமரித்து பாதுகாக்கத் தவறுவதன் விளைவாக, சிறாா்களில் சிலா் குற்றத்தில் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய சூழலில், சிறாரைத் தண்டிப்பதைவிட, அவா்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவதே சரியான தீா்வு என்று தெரிவித்தாா்.
வாழ்க்கையை சட்டம் சிதைத்துவிடக் கூடாது: உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா பேசுகையில், ‘சிறாா் நீதிச் சட்டம் 2015 என்பது சிறாா்களின் எதிா்காலத்தை பற்றிய சட்டமாகும். சட்டத்தை சிறாா் மீறியதற்காக, சிறாரின் வாழ்க்கையை சட்டம் சிதைத்துவிடக் கூடாது’ என்று தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் சிறாா் நீதிச் சட்டம் 2015 தொடா்பான உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களின் முக்கியத் தீா்ப்புகள் அடங்கிய மின்னணு தொகுப்பை தலைமை நீதிபதி சூா்ய காந்த் வெளியிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.