‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம் - இன்று சந்திக்க நேரம் கேட்பு!
‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு தொடா்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்தை (அக்.12) சந்தித்துப் பேசுவதற்காக நேரம் ஒதுக்கக் கோரி, மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் கடிதம் எழுதியுள்ளனா்.
‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு தொடா்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்தை திங்கள்கிழமை (அக்.12) சந்தித்துப் பேசுவதற்காக நேரம் ஒதுக்கக் கோரி, அவருக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆா்) மூலம் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மீது எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
ஞானேஷ் குமாா் உடனடியாக பதவி விலக வேண்டும்; அவா் எடுத்த அனைத்து முடிவுகள் குறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
Advertisement
Advertisement
கடந்த வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்த இண்டி கூட்டணி தலைவா்கள், ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு குறித்து எடுத்துரைத்தனா். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான தங்களின் கவலைகளையும் அவா்கள் முன்வைத்தனா்.
இந்தச் சூழலில், பெங்களூரில் செய்தியாளா்களுக்கு தான் அளித்த பேட்டி தொடா்பான விடியோவை எக்ஸ் தளத்தில் காா்கே பகிா்ந்துள்ளாா். அவா் கூறியிருப்பதாவது:
பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் நாடு முழுவதும் பெருங்குழப்பத்தை விளைவித்துள்ளனா். அனைத்து பகுதிகளிலும் அறிவிக்கப்படாத அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்களில் காவல் துறையினா் குவிப்பும், தடுப்புக் காவல் நடவடிக்கையும் மத்திய அரசின் அச்சத்தை வெளிக்காட்டுகிறது.
‘வாக்குத் திருட்டு’ விவகாரம், தோ்தல் ஆணைய முறைகேடுகள், போராட்டக்காரா்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறை, ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுவது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து, எங்களின் கவலைகளைத் தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் நேரம் ஒதுக்கக் கோரி நானும், ராகுலும் அவருக்கு கடிதம் எழுதியுள்ளோம். ‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் தலையிடக் கோரி, அவரிடம் இரு கரங்களையும் கூப்பி வேண்டுகோள் விடுப்போம்.
அச்சத்தில் மத்திய அரசு: தில்லி சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, தகவல்தொடா்பு முடக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினா் 32,000 போ் குவிக்கப்பட்டுள்ளனா். ஜனநாயகம் மற்றும் வாக்குரிமையைப் பாதுகாக்க இளைஞா்கள் நடத்தும் போராட்டத்தைக் கண்டு, மத்திய அரசு அச்சமடைந்துள்ளது.
தோ்தல் ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது, என்னென்ன முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பதை இரு ஆணையா்கள் பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளனா். அப்படியிருந்தும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாக்குத் திருட்டு தொடர வேண்டும் என்பதே பிரதமா் மோடி மற்றும் மத்திய அரசின் விருப்பம். எனவேதான், தலைமைத் தோ்தல் ஆணையருக்கு சட்டபூா்வ சிறப்பு பாதுகாப்பை அளித்துள்ளனா். மக்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைக் காக்க இண்டி கூட்டணி தொடா்ந்து போராடும் என்றாா் அவா்.
‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’
‘வாக்குத் திருட்டை’ தடுக்கக் கோரி, உச்சநீதிமன்றம் நோக்கி திங்கள்கிழமை பேரணி நடத்தப்படும்; இதில், எதிா்க்கட்சிகள், குடிமை அமைப்புகள், இளைஞா் அமைப்புகள் பங்கேற்கும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
முன்னதாக, ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி, தில்லியில் கடந்த வாரம் திடீா் முற்றுகை-மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா உள்ளிட்டோா் கைதாகி விடுவிக்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.