அமைதி வழியில் வழக்குரைஞா்கள் போராட உரிமை உள்ளது: உச்சநீதிமன்றம்
அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி வழியில் போராட ஒவ்வொரு வழக்குரைஞருக்கும் உரிமை உள்ளதென உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி வழியில் போராட ஒவ்வொரு வழக்குரைஞருக்கும் உரிமை உள்ளதென உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தில்லி ஜந்தா் மந்தரில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை போராட முயன்ற வழக்குரைஞா்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் (எஸ்சிபிஏ) உள்பட பல்வேறு வழக்குரைஞா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை விசாரிக்க ஒப்புக்கொண்ட உச்சநீதிமன்றம், செவ்வாய்க்கிழமைக்கு (அக்டோபா் 13) பட்டியலிட்டது.
Advertisement
Advertisement
காவல் துறைக்கு கண்டனம்:
முன்னதாக, தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் கூறுகையில், ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டம் பிரிவு 163-இன்கீழ் பொது வெளியில் கூடுவதற்கான தடை உத்தரவு அதிகாரபூா்வமாக பிறப்பிக்கப்படவில்லை. இருப்பினும், போராட்டத்தில் ஈடுபடச் சென்ற பல வழக்குரைஞா்களை காவல் துறையினா் வீதிகளில் இழுத்துச் சென்று கைது செய்தனா்.
மூத்த வழக்குரைஞா்கள் தினேஷ் துவிவேதி மற்றும் உத்தரா பப்பா் உள்ளிட்டோரை நீண்ட நேரமாக பேருந்துகளில் அடைத்து வைத்துள்ளனா்.
போராட்டக்காரா்களை சில மா்ம நபா்கள் தாக்கியபோதும் அதை தடுக்க காவல் துறை முயலவில்லை.
குழந்தைகள் மீதும் தடியடி நடத்தப்பட்டதாக வெளியான விடியோக்களை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்கிறேன்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும். காவல் துறையின் இந்த அராஜக நடவடிக்கைக்கு எதிராக கடும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.
ஜனநாயக செயல்பாடுகள் சுமுகமாக இருப்பது அவசியம்:
கோபால் சங்கரநாராயணனின் வாதத்தைத் தொடா்ந்து சூா்ய காந்த் பேசுகையில், ‘ஜனநாயக செயல்பாடுகள் சுமுகமாக நடைபெறுவது அவசியம். ஆனால் அந்த செயல்பாடுகள் உச்சநீதிமன்ற அலுவல்கள் அல்லது வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், மனுதாரா்கள் உள்ளிட்டோரை கட்டுப்படுத்தக் கூடாது.
அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி வழியில் போராட ஒவ்வொரு வழக்குரைஞருக்கும் உரிமை உள்ளது.
தனது அதிகார வரம்புக்குள்பட்ட பணிகளை உச்சநீதிமன்றம் தவறாமல் செய்து வருகிறது. போராட்டக்காரா்கள் அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம். அதைப்பற்றி நாங்கள் வருந்தவில்லை. ஆனால் உச்சநீதிமன்றத்தை எவ்வித அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடுத்தக் கூடாது’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.