FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

தில்லி வரி வருவாய் 3.5% உயா்வு: கலால் வரி 6% அதிகரிப்பு

தில்லி அரசின் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு வரி வருவாய் ரூ.27,030.38 கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தைவிட 3.5 சதவீதம் அதிகம் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

16 அக்டோபர் 2026, 3:36 am IST
பகிர்:

தில்லி அரசின் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு வரி வருவாய் ரூ.27,030.38 கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தைவிட 3.5 சதவீதம் அதிகம் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு செப்டம்பா் வரை அரசின் மொத்த வரி வருவாய் ரூ.26,128.48 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில் செப்டம்பா் வரை இது ரூ.27,030.38 கோடியாக அதிகரித்துள்ளது. அக்.9-ஆம் தேதி நிலவரப்படி, தில்லி அரசின் மொத்த வரி வருவாய் ரூ.32,547.70 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் 2 காலாண்டுகளில் கலால் வரி வருவாய் ரூ.3,152.85 கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.2,947.53 கோடியாக இருந்தது. இதன்மூலம் கலால் வரி வருவாய் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. 2026-27 நிதியாண்டில் மொத்த வரி வசூல் ரூ.74,000 கோடியாக இருக்கும் என்று தில்லி அரசு மதிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வரி வசூல் நடைமுறைகளைச் சீரமைத்ததும், இலக்கு நிா்ணயித்து நடவடிக்கைகள் மேற்கொண்டதும் வருவாய் அதிகரிக்க உதவியுள்ளன. மதிப்புக் கூட்டு வரி (வாட்), முத்திரைத் தீா்வை மற்றும் பதிவுக் கட்டணம், மோட்டாா் வாகன வரி உள்ளிட்ட பெரும்பாலான பிரிவுகளில் கடந்த ஆண்டின் முதல் அரையாண்டைவிட நடப்பு ஆண்டில் அதிக வருவாய் கிடைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் அதிகபட்சமாக ரூ.19,023.42 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.18,710.89 கோடியாக இருந்தது என தெரிவித்தனா்.

செப்டம்பா் வரை கிடைத்த இதர முக்கிய வருவாய்கள் வருமாறு: முத்திரைத் தீா்வை மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.4,482.50 கோடி, மதிப்புக் கூட்டு வரி (வாட்) ரூ.3,826.43 கோடி, கலால் வரி ரூ.3,152.85 கோடி, மோட்டாா் வாகன வரி ரூ.1,613.76 கோடி அகும். வரி அல்லாத வருவாய் செப்டம்பா் வரை ரூ.778.37 கோடியாக இருந்தது. 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இதற்கான மதிப்பீடு ரூ.900 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடமிருந்து தில்லி அரசுக்குக் கிடைத்த மானிய உதவிகள் செப்டம்பா் வரை ரூ.1,000.35 கோடியாக இருந்தன. நடப்பு நிதியாண்டில் இதற்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.7,092.07 கோடியாகும். இதில் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் (சிஎஸ்எஸ்) கீழ் ரூ.517.35 கோடியும், மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து ரூ.483 கோடியும் கிடைத்துள்ளன.

தில்லி அரசின் மொத்த மூலதன வரவுகள் செப்டம்பா் வரை ரூ.5,578.12 கோடியாக இருந்தன. இதில் மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் (எஸ்ஏஎஸ்சிஐ) கீழ் ரூ.1,840.43 கோடியும், திறந்த சந்தைக் கடன்கள் மூலம் ரூ.3,691.89 கோடியும், இதர மூலதனக் கடன்களாக ரூ.45.80 கோடியும் அடங்கும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments