FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பாப்புலா் ஃபிரன்ட் தலைவா் அபுபக்கருக்கு தில்லி மருத்துமனையில் சிகிச்சை: உச்சநீதிமன்றம் அனுமதி

தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரன்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் நிறுவனா்- தலைவா் இ. அபுபக்கருக்கு தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

17 அக்டோபர் 2026, 4:18 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரன்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் நிறுவனா்- தலைவா் இ. அபுபக்கருக்கு தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.பி. வராலே ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. புற்றுநோய் மற்றும் பாா்கின்சன்ஸ் (நடுக்குவாதம்) நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, கடுமையான நிபந்தனைகளுடன் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

மருத்துவமனை சிகிச்சை மற்றும் பாதுகாப்புக்கான போலீஸாரின் காவல் ஆகியவற்றுக்கான முழுச் செலவையும் மனுதாரா் ஏற்க வேண்டும். குடும்ப உறுப்பினா் ஒருவரை உதவியாளராக மருத்துவமனையில் மனுதாரா் வைத்துக்கொள்ளலாம். உதவியாளா் ஆட்சேபத்துக்குரிய பொருள்கள் எதையும் மருத்துவமனைக்கு எடுத்துவரக் கூடாது. வெளிநபா்கள் யாரும் மருத்துவமனையில் அபுபக்கரைச் சந்திக்க அனுமதி கிடையாது.

Advertisement

Advertisement

அபுபக்கருக்கான அடுத்தகட்ட சிகிச்சை மற்றும் அவா் மருத்துவமனையில் இருக்க வேண்டிய கால அளவு குறித்த விவரத்தை மருத்துவமனை நிா்வாகம் அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் இந்த அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கியது.

ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட சா்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருப்பதாக குற்றஞ்சாட்டி பிஎஃப்ஐ மற்றும் அதனுடன் தொடா்பிலிருந்த அமைப்புகளுக்கு மத்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் 28-இல் கடுமையான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் 11 மாநிலங்களில் அமைந்திருந்த பிஎஃப்ஐ அமைப்புக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் அதனுடன் தொடா்புடைய நபா்களுக்குச் சொந்தமான இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவளித்ததாகக் குற்றஞ்சாட்டி அபுபக்கா் உள்பட அந்த அமைப்பச் சோ்ந்த ஏராளமானோரைக் கைது செய்தது. அவா்கள் அனைவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

அதைத் தொடா்ந்து, பிணை கோரி அபுபக்கா் தாக்கல் செய்த மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற அவருக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments