கொல்கத்தா துர்கா பூஜை கூட்ட நெரிசல் சம்பவம்: ஏற்பாட்டாளர்கள் உட்பட 7 பேர் கைது
கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலியான நிகழ்வில் 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி..
கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலியான நிகழ்வில் அதன் ஏற்பாட்டாளர்கள் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்திருந்தது. இதையடுத்து விசாரணையின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை இரவு 14 பேரை போலீஸார் தடுத்து வைத்திருந்தனர்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், நாங்கள் ஏழு பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் நேற்று இரவு தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 பேரில் அடங்குவர். மேலும் சில கைதுகள் நடக்க வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
கைது செய்யப்பட்டவர்களில் பூஜை கமிட்டியின் செயலர், துணைத் தலைவர் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த இரு ஊழியர்கள் உள்ளிட்டோர் அடங்குவர் என்று அவர் கூறினார்.
பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிட்ட அந்த அதிகாரி, ஞாயிற்றுக்கிழமை கூராய்வு நடைபெறும் என்று தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தசரா பண்டிக்கை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான நவராத்திரி பண்டிகைகளுக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ள நிலையில், சோர்பகன் சர்போஜானில் துர்கா பூஜைக்காகப் பந்தல் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அப்பகுதியில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மிகக் கனமழை பெய்ததால், பந்தலுக்கு வெளியே கூடியிருந்த மக்கள் திடீரென முந்தியடித்துக்கொண்டு உள்ளே ஓடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் 19 பேர் பலியான நிலையில், காயமடைந்த 35-க்கும் மேற்பட்டோர் உயர் சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் சுவேந்து அதிகாரி ஆகியோர் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
Kolkata Police have arrested seven people, including organisers of Chorbagan Durga Puja, for the pandal stampede that killed at least 19 people, a senior officer said on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.