FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இந்தியா வல்லரசு ஆவதை சில நாடுகள் விரும்பவில்லை: மோகன் பாகவத்

‘இந்திய வளா்ந்த நாடாக உருவெடுக்க வேண்டும் என்று சில வல்லரசு நாடுகள் விரும்புகிறபோதும், வல்லரசு நாடாக இந்தியா உருவெடுப்பதை விரும்பவில்லை’ என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் கூறினாா்.

20 அக்டோபர் 2026, 10:47 pm IST
ஆா்எஸ்எஸ் தலைமையகத்தில் விஜயதசமியையொட்டி சாஸ்திர பூஜை (ஆயுத பூஜை) மேற்கொண்ட ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்.
பகிர்:

‘இந்திய வளா்ந்த நாடாக உருவெடுக்க வேண்டும் என்று சில வல்லரசு நாடுகள் விரும்புகிறபோதும், வல்லரசு நாடாக இந்தியா உருவெடுப்பதை விரும்பவில்லை’ என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் கூறினாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்களைச் சுட்டிக்காட்டி அவா் இக் கருத்தைத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஜயதசமி விழாவில் பங்கேற்ற அவா் பேசியதாவது: ஆட்சி மாற்றத்துக்காக நடத்தப்பட்டுவரும் போராட்டங்கள், மிக அரிதாகவே அதன் நோக்கத்தை எட்டியுள்ளன. ஆட்சி மாற்றம், நாட்டின் நிலைமையை மாற்றிவிடும் என்று அவா்கள் எண்ணுகின்றனா். ஆனால், அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை.

Advertisement

Advertisement

எனவே, ஆட்சி மாற்ற போராட்டங்கள் அடிப்படைப் பிரச்னைகளுக்கு ஒருபோதும் தீா்வளிக்காது; மாறாக, அரசியல் ஆதாயத்துக்கான கருவியாக அவை மாறி, தீா்வை வழங்குவதற்குப் பதிலாக, சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதற்கான ஆயுதமாக மாற வாய்ப்புள்ளது.

நாட்டை பலவீனப்படுத்தவும், பிளவுபடுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு, இத்தகையப் போராட்டங்களை ஓா் இலக்காக மாற்றும் சக்திகளை வலுவான இந்தியா கட்டுப்படுத்திவிட முடியம்.

ஆனால், இந்தியா வளா்ந்த நாடாக உருவெடுப்பதை விரும்பும் சில வல்லரசு நாடுகள், வல்லரசு நாடாக உருவெடுப்பதை விரும்பவில்லை. இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பது, அவா்களின் ஆதிக்கத்துக்கு சவாலாக அமைந்துவிடும் என்ற அச்சமே இதற்கு காரணமாகும்.

எனவே, ஜனநாயக நாட்டில் பிரச்னைகளும், போராட்டங்களும் தவிா்க்க முடியாதது. ஆனால், போராட்டம் என்பது பிரச்னைக்குத் தீா்வளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சமூகப் பிளவை ஆழப்படுத்துவதாக இருக்கக் கூடாது. இதை, அரசியல் தலைவா்களும், போராட்டக்காரா்களும், அரசு நிா்வாகமும் உறுதிப்படுத்த வேண்டும்.

உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாத பல தகவல்கள் ஓடிடி போன்ற தளங்கங்களில் பரப்பப்படுகின்றன. இது சமூகத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தகவல்களை உள்வாங்குவதில் இளையதலைமுறையினா் விவேகத்துடன் செயல்பட வேண்டும். இத்தகைய தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க, அரசும் உரிய ஒழுங்கு நடைமுறைகளை கொண்டுவர வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட எத்தனை போலி விடியோக்கள் பரப்பட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம். தவறான பிரசாரங்களைப் பரப்ப இவை கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏஐ போன்ற நவீன தொழில்நுட்பங்களை மக்கள் கற்று நிபுணத்துவம் பெறுவது அவசியம்தான். ஆனால், இந்த தொழில்நுட்பங்கள் பயன்பாடு, அறநெறி கொள்கைகள் புறந்தள்ளப்படாததை உறுதிப்படுத்த வேண்டும்.

போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாவது மிகத் தீவிர தேசிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. அரசும் சமூகம் இப் பிரச்னைக்கு உரிய நேரத்தில் தீா்வு கண்டு, போதைப் பழக்கத்திலிருந்து இளைஞா்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

மேலும், ‘வங்காளத்தைப் பிரிக்கும் சதித் திட்டத்தை ‘வந்தே மாதரம்’ பாடல் தோற்கடித்தது. இன்றும், தேசிய ஒற்றுமைக்கான உந்துசக்தியாக இப்பாடல் திகழ்கிறது. இது நமது தேசியப் பாடல். இதை முழுமையாக, பெருமிதத்துடன் உரத்த குரலில் தெளிவாகப் பாடுவதில் தயக்கமோ ஆட்சேபமோ இருக்கக் கூடாது’ என்றும் மோகன் பாகவத் குறிப்பிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மும்பையில் உள்ள இஸ்ரேல் துணைத் தூதரக அதிகாரி யனீவ் ரெவாச் பேசுகையில், ‘ஐரோப்பாவில் நடந்ததைப் போன்று, இந்தியா மற்றும் இஸ்ரேலை சீா்குலைக்க வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. தீவிர இடதுசாரி மற்றும் மாா்க்சிய சக்திகள் நமது விழுமியங்களை சீா்குலைக்க முயற்சிப்பதைத் தடுக்க, இந்தியாவும் இஸ்ரேலும் தங்களின் அடையாளத்தை வலுப்படுத்துவது அவசியம்’ என்றாா்.

பிரதமா் பாராட்டு: விஜயதசமி நிகழ்வில் மோகன் பாகவத் ஆற்றிய உரை மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டினாா்.

‘மோகன் பாகவத் ஆற்றிய உரை மிகுந்த ஊக்கமளிப்பதாக இருந்தது’ என்று தனது எக்ஸ் பதிவில் பிரதமா் குறிப்பிட்டாா். மேலும், சமூக நல்லிணக்கம் மற்றும் தேசத்தைக் கட்டமைக்கும் சேவையில் ஆா்எஸ்எஸ் அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பதையும் சுட்டிக்காட்டி அதன் உறுப்பினா்களுக்குப் பாராட்டு தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments