FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உலகத் தலைமை ஏற்கும் இந்தியா!

அமைதிப் பூங்காவாக இருக்கும் இந்தியா, அனைவரையும் வழிநடத்தும் நாடாகவும், மனிதகுலத்தை அரவணைத்துச் செல்லும் நாடாகவும் விரைவில் உருவாகும் என உலகம் எதிர்பார்க்கிறது.

பகிர்:

உலகத்தில் அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்து, செயற்கை நுண்ணறிவு மக்களை ஆட்சி செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. இதனால், உலகில் உள்ள அனைத்து நாடுகளும், குறிப்பாக வல்லரசு நாடுகள் தனித் தனியே பயணித்து, உலகில் தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. இதனால், இந்த 21-ஆம் நூற்றாண்டில் உலகம் ஒற்றுமையின்றி வீழ்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

உலகை வழிநடத்த வேண்டிய வல்லரசு நாடுகள் தங்கள் நாட்டின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, மற்ற நாடுகளைப் புறக்கணிப்பதும், பிற நாட்டு வளங்கள் மீது அக்கறை செலுத்துவதும் இன்று அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.

Advertisement

Advertisement

அமெரிக்கா, உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாகும். உலகளாவிய வர்த்தகம் மற்றும் உற்பத்தியில் இதன் பங்கு மிக அதிகம். அதன் பொருளாதாரம், ராணுவம், தொழில்நுட்பம் மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவையே இதற்கு முதன்மைக் காரணங்களாகும். கடந்த 80 ஆண்டுகளாக அமெரிக்க அதிபரே உலகளாவிய ஸ்திரத்தன்மையின் நாயகனாக உள்ளார். அவரே தன் நாட்டின் மீது உலக மக்கள் கொண்டிருந்த நம்பகத்தன்மையை உணர்ந்து உலக நாடுகளை வழி நடத்துவார்.

இப்போது, அமெரிக்கா அந்தப் பாதையிலிருந்து வழுவி வருகிறது. சீனாவும், ரஷியாவும் உலக ஒழுங்கைப் பேண எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வெறும் பார்வையாளராகவே இருந்து வருகின்றன.

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால், உலகம் முழுவதும் திறந்து விடப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தில் பெருகிய பெருநிறுவனங்களின் நம்பகத்தன்மை இழப்புக்குள்ளாகிவருகிறது. வளர்ந்து விட்ட அறிவியல் தொழில்நுட்பம், மிக மிக ஆபத்துகள் நிறைந்தது என்பதை உலகம் உணரத் தொடங்கி விட்டது. இந்தச் சூழ்நிலையில், வல்லரசு நாடுகள் பிற நாடுகளில் ஏற்படும் பொருளாதாரப் பிரச்னைகளைக் கண்டுகொள்வதில்லை.

மேலும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க எந்த வல்லரசு நாடும் உலகம் முழுவதுக்குமான ஒரே விதிமுறையை பிற நாடுகளுடன் இணைந்து, ஐ.நா. சபையின் ஒப்புதலுடன் கையாள எந்த முன்னெடுப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இது குறித்து இந்தியாதான் தனது ஆதங்கத்தை அவ்வப்போது ஐ.நா.முன் எடுத்துரைத்து வருகிறது. சர்வாதிகார போக்கைக் கடைப்பிடிக்கும் வல்லரசு நாடுகளால், ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடுகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. இதனால், உலகில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகிறது.

1945-இல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததிலிருந்தே, சர்வதேச உறவுகளில் உலகப் பேரரசுகளின் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் உலகை இன்றுவரை கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றன. உலகமே பல்வேறு நெருக்கடிகளால் சூழப்பட்டிருந்த போது, இந்தத் தலைவர்கள் உலகளாவிய ஸ்திரத்தன்மையை தங்களின் தீர்க்கமான முடிவுகளாலும், முதிர்ச்சியான அணுகுமுறைகளாலும் பதற்றமான உலகச் சூழலில் இன்னுமொரு உலகப் போர் ஏற்படாமல் தடுத்து நிறுத்தியதையடுத்து, உலகுக்கு ஒரு நிலையான அமைதியை விட்டுச் சென்றனர்.

1949-ஆம் ஆண்டு மா சே துங் தலைமையில் சீனாவில் கம்யூனிஸ ஆட்சி அமைந்தது. இது ஆசியாவில் கம்யூனிஸம் வேகமாகப் பரவுமோ என்ற அச்சத்தை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியது. 1953-ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் சர்வாதிகாரியான ஜோசப் ஸ்டாலினின் மரணம், அந்நாட்டில் ஓர் அரசியல் அதிகாரப் போட்டியை உருவாக்கியது. இது உலக அரசியலில் பெரும் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியது.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் அமெரிக்காவை வழிநடத்திய அதிபர்களான ஹாரி ட்ரூமன் மற்றும் டுவைட் டி. ஐசனோவர் ஆகியோர் தங்களது நிலையான வெளியுறவுக் கொள்கைகளின் மூலம் உலக நாடுகளை வழிநடத்தி, உலகில் அமைதியை ஏற்படுத்தினர்.

1966-ஆம் ஆண்டில் மா சே துங் சீனாவில் கலாசாரப் புரட்சியைத் தொடங்கினார். இது, சீனாவை பெரும் வன்முறை, உள்நாட்டுக் குழப்பம் மற்றும் தீவிர கொந்தளிப்புக்குத் தள்ளியது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சன் மற்றும் சோவியத் யூனியன் தலைவர் லியோனிட் இலிச் பிரெஷ்நேவ் ஆகியோருக்கு இடையேயான 'டெட்டாண்ட்' எனப்படும் சுமுக உறவுக் கொள்கைதான் உலகளாவிய ஒழுங்கையும், அமைதியையும் நிலைநாட்டின.

1980-களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் போது, அமெரிக்காவும், சீனாவும் தங்களுக்குள் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டு, உலகப் பொருளாதாரத்தில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்தன. இந்த நூற்றாண்டில் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டு மேற்கத்திய நாடுகளை பெரிதும் பாதித்தது. அப்போது இந்தியா, பிற நாடுகளுடன் இணைந்து 1930-களின் தொடக்கத்தில் ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தம் மீண்டும் ஏற்படாமல் உலகை அந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவர வழிவகை செய்தது. 1945-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகை வழிநடத்தும் மூன்று மிக முக்கியமான வல்லரசு நாடுகளின் தலைவர்கள் முதியவர்களாகவும், தன்னிச்சையாக செயல்படுபவர்களாகவும், தங்கள் பதவிகளை எளிதில் விட்டுக்கொடுக்க விரும்பாதவர்களாகவும் இருக்கிறார்கள். எனினும், இந்த நாடுகளை ஆளும் அதிபர்களிடம் அடுத்தகட்டத் தலைமை குறித்த தெளிவான திட்டம் ஏதுமில்லை.

நாடுகளுக்கிடையேயான போர்களைத் தூண்டி விடுதல், இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு தாங்க முடியாத அதிக வரிகளை விதிப்பது போன்ற காரணங்களால் வளர்ந்துவரும் நாடுகள் அமெரிக்காவை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கி விட்டன.

வரும் காலங்களில், உலகின் மிக வலிமைமிக்க பதவியை யார் வகிப்பார் என்பது குறித்த நிச்சயமற்ற சூழ்நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் ஏற்பட்டுவரும் உள்நாட்டுக் குழப்பங்களும், தற்போதைய அதிபருக்குப் பிறகு வேறொருவர் பதவிக்கு வந்தால், அவர் எவ்வாறு பிரச்னைகளைக் கையாள்வார் என்பது குறித்தும் உலகம் அஞ்சுகிறது. மற்றொரு பெரும் வல்லரசான சீனா, உள்நாட்டு அரசியலைத் தனி நபர் வழிபாட்டு முறையாக மாற்றிய தலைவரால் வழிநடத்தப்படுகிறது. அவர் அரசு, வணிகம், கல்வி, கலாசாரம் மற்றும் அறிவியல் ஆகியவற்றின் மையப் புள்ளியாக கம்யூனிஸ்ட் கட்சியை இணைத்து அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்துள்ளார்.

வலிமைமிக்க தலைவர் வயதாகும்போது, மறைமுகமாக நிலவி வந்த கோஷ்டிப் பூசல்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தீவிரப் போட்டியாக உருவெடுக்கும். உலக ஒழுங்கைப் பேணுவதில் சீனாவின் தலைவர்களால் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க முடியுமா என்பது சந்தேகத்துக்குரியதாகிறது. இதனால், அரசியலில் நிச்சயமற்ற தன்மைகள் உலகின் மற்ற பகுதிகளுக்குப் பாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும்.

ஒப்பீட்டளவில் அமெரிக்கா அல்லது சீனாவுக்கு இணையான நிலையில், இப்போது ரஷியா இல்லை. ரஷியாவின் பொருளாதாரம் முக்கியமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியையே நம்பியுள்ளது. இதனால், உலகளாவிய பொருளாதார ஆதிக்கத்தைச் செலுத்த ரஷியாவால் முடியவில்லை. அதிபர் விளாதிமீர் புதின் நீண்ட காலமாக அந்நாட்டை ஆட்சி செய்து வருகிறார். அவரின் வயது அதிகரித்துக் கொண்டேயிருந்தாலும், நாட்டின் முழு அதிகாரமும் அவரிடமே உள்ளது.

உக்ரைன் மீதான போர் மற்றும் தற்போதைய உலக அரசியல் சூழலில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தனக்கு அடுத்ததாக நாட்டை வழிநடத்தப் போகும் வாரிசை இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை. இதனால், சீனாவைவிட ரஷியாவில் ஆட்சி மாற்றம் அல்லது அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மிகவும் ஆபத்தானதாகவும், குழப்பம் நிறைந்ததாகவும் மாற வாய்ப்புள்ளது. அங்கு ஏற்படும் இந்த வாரிசுரிமைப் போட்டி ரஷியாவின் எல்லைகளைத் தாண்டி உலகளாவிய ரீதியில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்.

உலக நாடுகளில் ஆங்காங்கே ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள், அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்கள், அதன் புகழ்பெற்ற, 'தடுப்புகள் மற்றும் சமநிலைகள்' அதாவது, ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் மூன்று முக்கிய அங்கங்களான சட்டப்பேரவை, நிர்வாகத் துறை மற்றும் நீதித் துறை ஆகியவை தங்களுக்குள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் ஒருவரை ஒருவர் கண்காணித்து வருகிறதா என்பது குறித்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்தச் சூழ்நிலையில், உலகில் தலைமைத்துவ நெருக்கடியால் பாதிக்கப்பட்டுவரும் நாடுகளின் பார்வை இப்போது உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மீது விழுந்துள்ளது. காரணம், இந்தியா வேற்றுமைகளில் ஒற்றுமையைக் கண்டு மிகப் பெரிய ஜனநாயக நாடாகி, மண்ணிலிருந்து விண் வரை பல சாதனைகளைச் செய்து தன் வெற்றியை நிலைநாட்டி மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா தனது வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கைகளை வகுக்கும்போது, இந்த உலகளாவிய கொள்கைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

உலக அரசியல் களம் நிலையற்றதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் மாறி வருவதால் இந்தியா மிகவும் எச்சரிக்கையுடனும், அதே நேரத்தில், தனது தேசிய நலனைப் பாதுகாக்கும் வகையிலும் புதிய வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வேண்டும்.

இன்று இருக்கும் சூழ்நிலையில், இந்தியா வல்லரசு ஆவதை உலகின் எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை உலக நாடுகள் கணிக்கத் தொடங்கிவிட்டன. அமைதிப் பூங்காவாக இருக்கும் இந்தியா, அனைவரையும் வழிநடத்தும் நாடாகவும், மனிதகுலத்தை அரவணைத்துச் செல்லும் நாடாகவும் விரைவில் உருவாகும் என உலகம் எதிர்பார்க்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.