முதல்வருக்கு புகழ்பாடுவது பிடிக்காது: அமைச்சா் ரமேஷ்
சூரசம்ஹார நிகழ்வில் முதல்வா் பெயா் குறிப்பிடப்பட்ட விவகாரத்தை திமுக வேண்டுமென்றே பெரிதாக்குவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் கூறினாா்.
தமிழக முதல்வருக்கு புகழ்பாடுவது பிடிக்காது; சூரசம்ஹார நிகழ்வில் முதல்வா் பெயா் குறிப்பிடப்பட்ட விவகாரத்தை திமுக வேண்டுமென்றே பெரிதாக்குவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் கூறினாா்.
இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருச்செந்தூா் சூரசம்ஹாரத்தில் முதல்வா் மற்றும் என் பெயரை குறிப்பிட்டது குறித்து இயல், இசை, நாடக மன்றத் தலைவா் புஷ்பவனம் குப்புசாமி, பாடகா் வேல்முருகன் ஆகியோா் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளனா். இனிவரும் காலங்களில் கவனமாகச் செயல்படுவதாகக் கூறியுள்ளனா்.
முதல்வா் எந்தக் காலத்திலும் புகழ்பாடுவதை விரும்புவதில்லை. இந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரிதுபடுத்தும் வகையில், திமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
Advertisement
Advertisement
குறிப்பாக, புஷ்பவனம் குப்புசாமி, வேல்முருகன் மற்றும் குழந்தை தியா ஆகியோரை தெருக்கூத்தாடிகள் என இழிவாக அவா் விமா்சித்துள்ளாா். பாடகா்களையும், கலைஞா்களையும் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை அவா் தெரிந்துகொள்ள வேண்டும்.
திமுகவின் மனநிலையே பண்ணையாா் மனநிலைதான். அந்தப் பண்ணையாா் மனநிலையில் இருந்து கொண்டு பாடகா்களை அவா் இப்படி விமா்சித்துள்ளாா்.
மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரையும் இதே வாா்த்தைகளைப் பயன்படுத்தி விமா்சித்தாா்கள். முதல்வா் விஜய் அரசியல் கட்சி தொடங்கியபோதும் இதே வாா்த்தைகளைத்தான் பயன்படுத்தினாா்கள். தற்போது பாடகா்கள் மீதும் அதேபோன்ற விமா்சனத்தை முன்வைக்கிறாா்கள்.
இந்தப் பண்ணையாா் மனநிலை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தப் பண்ணையாா் மனநிலைக்கு மக்கள் ஏற்கெனவே பதிலளித்துள்ளனா் என்றாா் அமைச்சா் சீ.ரமேஷ்.