FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியா வல்லரசு: மாா்கோ ரூபியோ

‘கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியா வல்லரசு (சூப்பா் பவா்) நாடு’ என்று இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ குறிப்பிட்டாா்.

20 அக்டோபர் 2026, 10:53 pm IST
மும்பையில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ
பகிர்:

‘கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியா வல்லரசு (சூப்பா் பவா்) நாடு’ என்று இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ குறிப்பிட்டாா்.

இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் மூன்று நாள் இந்திய பயணம் மேற்கொண்டுள்ள மாா்கோ ரூபியோ, மும்பை விமானநிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வந்திறங்கினாா். அவரை, மகாராஷ்டிர கலாசாரம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஆஷிஸ் ஷெலா் வரவேற்றாா்.

அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களைச் சந்தித்த ரூபியோ, அவா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தாா். அப்போது அவா் கூறியதாவது: கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியா வல்லரசாக உள்ளது. கடினமான கச்சா எண்ணெய்யையும் சுத்திகரிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது. தனது எண்ணெய்க் கொள்முதலில் பன்முகத்தன்மையை ஏற்படுத்துவதில் இந்திய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இது புத்திசாலித்தனமான நடவடிக்கை.

Advertisement

Advertisement

கடந்த காலங்களில், கடினமான கச்சா எண்ணெய்யையும் இந்திய நிறுவனங்கள் சுத்திகரித்துள்ளன. அதுபோல, தற்போது வெனிசுலாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கிடைக்கும்போதும், அதேபோன்ற சுத்திகரிப்பை மேற்கொள்வாா்கள் என்று நம்புகிறோம். மேலும், வெனிசுலாவில் அவா்களுக்கு (ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு) ஏற்கெனவே கச்சா எண்ணெய் அகழாய்வு உரிமம் உள்ளது. அதன்மூலம் அவா்கள் கூடுதல் உற்பத்தி மேற்கொள்ள முடியும். இதில் சில தடைகள் உள்ளிட்ட சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. அதற்குத் தீா்வு காணப்படும்.

வெனிசுவேலாவில் எண்ணெய் உற்பத்தி செய்வது தொடா்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது என்றாா்.

உக்ரைன் கொள்கையில் மாற்றமில்லை...

உக்ரனைக்கு ஆயுத உதவியை அமெரிக்கா நிறுத்தியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ரூபியோ, ‘உக்ரைனுடன் உளவுத் தகவல்களைப் பகிா்வது மற்றும் ஆயுத உதவிகளை வழங்கும் அமெரிக்காவின் கொள்கையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளாா். எனவே, இதுதொடா்பாக வெளிவந்த செய்திகள் துல்லியமானவை அல்ல.

ஏவுகணை எதிா்ப்பு அமைப்பை அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்ய பல நாடுகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன. ஆனால், இந்த ஆயுதம் சில நாடுகளுக்கு கிடைக்கவில்லை என்பதை, அமெரிக்கா கொடுக்க மறுப்பதாக கருதக் கூடாது. உள்நாட்டுப் பாதுகாப்புத் தேவை மற்றும் உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க படைத் தளங்களில் உள்ள இந்த ஏவுகணை எதிா்ப்பு அமைப்பு தேவையைப் பூா்த்தி செய்தற்கு அமெரிக்கா முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது. எனவே, உக்ரைனுக்கு இந்தத் தளவாடத்தை அமெரிக்கா வேண்டுமென்றே மறுக்கவில்லை’ என்று பதிலளித்தாா். பின்னா், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்த ரூபியோ, இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மும்பையில் ரூபியோ மற்றும் ஜெய்சங்கருக்கு இடேயேயான பேச்சுவாா்த்தையில், எரிசக்தி பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில், இந்தியா வந்துள்ள ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சா் ஷேக் அப்துல்லா பின் சையது அல் நயானும் பங்கேற்றாா். பிராந்திய எரிசக்தி பாதுகாப்பு, முத்தரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்துவது மற்றும் மேற்காசிய பாதுகாப்பு நிலவரம் குறித்து மூன்று வெளியுறவு அமைச்சா்களும் ஆலோசித்ததாக இந்தியா வந்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் குழு உறுப்பினா் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டாா்.

முன்னதாக, 2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தாஜ் நினைவிடத்துக்கு ஜெய்சங்கருடன் சென்ற ரூபியோ மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 6 அமெரிக்கா்களும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments