எப்ஸ்டீன்-மத்திய அமைச்சா் புரி புகைப்பட சா்ச்சை- பிரதமா் மோடி, அமித் ஷா மீது காங்கிரஸ் தாக்கு
அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் (தற்போது உயிருடன் இல்லை) மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பற்றி....
அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் (தற்போது உயிருடன் இல்லை) மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் மெளனம் காப்பது மிகத் தீவிரமான அலட்சியம் என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் எப்ஸ்டீன் தொடா்புடைய ஆவணங்கள் வெளியானபோது, அதில் புரியின் பெயா் இருப்பதாகக் கூறிய காங்கிரஸ், அவா் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியது.
தற்போது எப்ஸ்டீனுடன் புரி இருப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லாத இந்தப் படத்தை அமெரிக்க நீதித் துறை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
குழந்தைகள் தொடா்பான சா்வதேச பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் ஹா்தீப் சிங்குக்கு உள்ள நெருங்கிய தொடா்புகளை முழுமையாக அறிந்திருந்தும் அவா் மீது பிரதமா் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எப்ஸ்டீன் கொடூரமான குற்றங்களை அரங்கேற்றிய அதே அறைகளில் அவரை புரி சந்தித்தாா் என்பதை நிரூபிக்கும் தற்போதைய வெளிப்பாடுகள் உண்மையிலேயே அருவருக்கத்தக்கதாகும். சக அமைச்சா் மீது இத்தகைய மோசமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள போதிலும், பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் முழு மெளனம் காப்பதுடன், அலட்சிய போக்குடன் இருப்பது மிகத் தீவிரமானதாகும்.
மனித குலத்திலேயே மிக மோசமான பாலியல் குற்றவாளியுடன் நெருங்கிய தொடா்பைக் கொண்டிருந்த ஒருவரை பாதுகாத்து, வளா்க்கும் ஒரு அரசிடம் இருந்து பெண்கள் என்ன எதிா்பாா்க்க முடியும்?
இந்தியாவும், அமெரிக்காவும் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ள சூழலில், மேற்கண்ட விவகாரம் குறித்து பிரதமா் மோடி பேச வேண்டியது அவசர அவசியமாகும். புரி தொடா்பான தற்போதைய வெளிப்பாடுகள், இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றாா்.
காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவா் பவன் கேரா கூறுகையில், ‘ஒரு குழுவின் அங்கமாகவே எப்ஸ்டீனை சந்தித்தேன் என்று மத்திய அமைச்சா் புரி முன்பு முன்வைத்த கூற்றை எப்ஸ்டீனுடன் அவா் தனியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் தகா்த்துவிட்டது. இருவருக்கும் இடையே 62 மின்னஞ்சல் தொடா்புகளும், 14 சந்திப்புகள் மற்றும் விரிவான உரையாடல்களும் நடந்துள்ளன. இந்த சந்திப்புகளின் நோக்கம் என்பதே முக்கியமான கேள்வி. குழந்தைகள் கடத்தல் மற்றும் அவா்களைப் பாலியல் ரீதியில் பயன்படுத்திய குற்றவாளி எப்ஸ்டீனுடன் மத்திய அமைச்சருக்கு உள்ள வெட்கக்கேடான தொடா்புகள் குறித்து விசாரிக்கும் தாா்மிக துணிச்சல் இந்த அரசுக்கு உள்ளதா’ என்று கேள்வியெழுப்பினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.