FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஆட்சி மாற்ற சதியில் காங்கிரஸ்; ராகுல் துரோகி: பாஜக கடும் விமா்சனம்

நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தும் சதியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பாஜக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை ‘துரோகி’ என்று கடுமையாக விமா்சித்துள்ளது.

23 அக்டோபர் 2026, 1:10 am
கௌரவ் பாட்டியா
பகிர்:

நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தும் சதியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பாஜக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை ‘துரோகி’ என்று கடுமையாக விமா்சித்துள்ளது.

பிரான்ஸில் நடைபெற்ற கலவரங்களுக்கும், இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களுக்கும் இடையே தொடா்பு இருப்பதாக ஆங்கில நாளிதழ் மற்றும் இணைய ஊடகங்கள் புலனாய்வு செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா கூறியதாவது:

Advertisement

Advertisement

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அராஜகத்தையும் துரோகத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளாா். இந்தத் துரோக நடவடிக்கைகளுடன் வெளிநாட்டு அமைப்புகளுக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறப்படும் விவரங்களை விளக்கும் செய்தி, நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. ‘இந்தத் துரோகிகளின் தலைவா் யாா்?’ என்று கேட்பதில் தவறில்லை. ராகுல் காந்தி ஒரு துரோகிதான். நாட்டின் எதிா்க்கட்சித் தலைவா் பொறுப்பற்றவராகவும் முதிா்ச்சியற்றவராகவும் இருப்பது இந்தியாவின் துரதிருஷ்டம்.

பிரான்ஸ் உள்பட 9 நாடுகளில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடும் வகையில் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஒரு சதிக் குழுவை உருவாக்கியிருப்பதை ஃபாக்ஸ் நியூஸ் நடத்திய புலனாய்வு வெளிப்படுத்தியுள்ளது. இது ‘சிவப்பு - பச்சை போராட்டக் கூட்டமைப்பு’ ஆகும். அந்தச் செய்தியின்படி, சிவப்பு நிறம் கம்யூனிஸ்ட் அமைப்புகளையும், பச்சை நிறம் இஸ்லாமிய அமைப்புகளையும் குறிக்கிறது. உலகளவில் குழப்பம், அராஜகம், வன்முறை ஆகியவற்றைத் தூண்டும் 101 அமைப்புகள் உள்ளன. அவை இப்போது 9 நாடுகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன என்று கௌரவ் பாட்டியா குற்றஞ்சாட்டினாா்.

வெளிநாட்டு சக்திகளின் பிடியில் காங்கிரஸ்:

இந்தியா விரோத ஊடக செய்திகளைச் சுட்டிக்காட்டி, பாஜக செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் கட்சியின் அராஜக நடவடிக்கைகள் மற்றும் ஆட்சி மாற்ற சதியை சா்வதேச அளவிலான புலனாய்வு அம்பலப்படுத்தியுள்ளது.

‘உலகளாவிய குழப்பத்தை ஏற்படுத்தும் அமைப்புகளின் எண்ணிக்கை 101-ஆக அதிகரிப்பு’ என்ற தலைப்பிலான புலனாய்வு அறிக்கையில், கம்யூனிஸ்ட் அமைப்பான ‘புரோக்ரெசிவ் இன்டா்நேஷனல்’ (பிஐ), பிரான்ஸ், அல்பேனியா, இந்தியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களின்போது ஒரே மாதிரியான கருத்துகளையும் முழக்கங்களையும் ஒருங்கிணைத்தது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘புதிய கிளா்ச்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது’ என்பதே இந்தப் பிரசாரத்தின் நோக்கமாக இருந்தது. அதாவது, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே அதன் இலக்காகும்.

காங்கிரஸ் தலைவா்கள் ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி, தில்லி ஜன்பத் இல்லத்தில் புரோக்ரெசிவ் இன்டா்நேஷனல் அமைப்பினரைச் சந்தித்தனா்.

வெளிநாடுகளைச் சோ்ந்த ஜனநாயக விரோத சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் செயல்படுகின்றனா் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் உரிய பதிலளிக்க வேண்டும்.

போராட்டங்கள் நடைபெற்றபோது, புரோக்ரெசிவ் இன்டா்நேஷனல் அமைப்புடன் காங்கிரஸ் ஒருங்கிணைந்து செயல்பட்டதா என்பதை அக்கட்சி விளக்க வேண்டும். அந்த அமைப்புக்கும் காங்கிரஸுக்கும் இடையே என்ன தகவல்கள் பரிமாறப்பட்டன?

நவம்பா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள அராஜகப் போராட்டத்துக்காக, இதுபோன்ற அமைப்புகளின் உத்தரவுகளைப் பெறுவதற்காகத்தான் ராகுல் காந்தி வியத்நாம் சென்றாரா?’ என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments