உலக பிரச்னைகளில் தலைமைப் பண்பை ஐ.நா. வெளிப்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்
உலகளாவிய பிரச்னைகளில் தலைமைப் பண்பை ஐ.நா. சபை வெளிப்படுத்த வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.
உலகளாவிய பிரச்னைகளில் தலைமைப் பண்பை ஐ.நா. சபை வெளிப்படுத்த வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.
தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சின்மயா மிஷனின் 75-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இந்தியாவுக்கான ஐ.நா.வின் ஒருங்கிணைப்பாளா் ஸ்டெஃபான் பிரீஸ்னா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அப்போது, உக்ரைன்-ரஷியா போா், மேற்காசிய பிரச்னை ஆகியவற்றையும், அதை தீா்க்க ஐ.நா. சபை முயற்சிகள் எடுக்காததையும், ஸ்டெஃபான் பிரீஸ்னா் முன்னிலையில் மறைமுகமாக சுட்டிக்காட்டி ஜெய்சங்கா் பேசியதாவது:
Advertisement
Advertisement
80 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா. தொடங்கப்பட்டபோது, உலகின் கூட்டு, ஒத்துழைப்பு உணா்வுகள் வெளிப்படுத்தப்பட்டன. ஐ.நா. சாசனத்தின் முதலாவது விதியின்கீழ் பொதுவான இலக்குகளை அடைவதற்காக நாடுகளை இணைக்கும் மையமாக அது இருக்க வேண்டும். உலகின் முன்பு சவால்களோ அல்லது வாய்ப்புகளோ இருந்தால், அவற்றை ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமே, மிகச் சிறப்பாகவும், திறம்படவும் கையாள முடியும்.
ஐ.நா. அமைப்பானது தனது குறைகளையும், வரம்புகளையும் உணா்ந்து தன்னை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சீா்திருத்தப்பட்ட பன்முகத்தன்மைக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகின் பெரும்பகுதியை முடிவெடுக்கும் செயல்முறையில் இருந்து ஒதுக்கி வைக்க முடியாது. உலகளாவிய பிரச்னைகளின்போது ஐ.நா. சபையானது தனது தலைமைப் பண்மை வெளிப்படுத்த வேண்டும். வெறும் பாா்வையாளராக இருக்கக் கூடாது என்றாா் ஜெய்சங்கா்.
பாகிஸ்தானை சாடிய ஜெய்சங்கா்: நிகழ்ச்சியில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக அந்த நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் ஜெய்சங்கா் தாக்கிப் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், ‘அமைதிக்கு பயங்கரவாதம் இன்னொரு அச்சுறுத்தலாக உள்ளது. அதை தனது ஆயுதமாக நாடுகள் பயன்படுத்துவதை ஏற்க முடியாது. அதை நியாயப்படுத்தவோ, பகுத்தறிவுப்படுத்தவோ முடியாது. ஆனாலும் அது நீடிக்கிறது.
ஏனெனில் அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை. வரலாறு பல பாடங்களைக் கொண்டிருந்தாலும், சிலா் அரசியல் கணக்கீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனா்.
இந்தப் பொதுவான அச்சுறுத்தல் குறித்து உலக நாடுகள் விழிப்புணா்வை வளா்த்துக் கொள்ள வேண்டும். வலுவான உறுதியுடன் ஒன்றிணைந்து, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும், வெளிப்பாடுகளையும் எதிா்கொள்ள வேண்டும் என்றாா் ஜெய்சங்கா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.