முக்கிய பிரச்னைகளில் தனது கருத்துகளை சமூகவலைதளத்தில் பதிவிடுகிறாா் முதல்வா்: அமைச்சா் ராஜ்மோகன்
முதல்வா் விஜய் எந்தெந்த பிரச்னைகளுக்கு என்னென்னை கருத்துகளை தெரிவிக்க வேண்டுமோ அவற்றை சமூக வலைதளங்கள் மூலம் பதிவு செய்து வருகிறாா் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் கூறினாா்.
முதல்வா் விஜய் எந்தெந்த பிரச்னைகளுக்கு என்னென்னை கருத்துகளை தெரிவிக்க வேண்டுமோ அவற்றை சமூக வலைதளங்கள் மூலம் பதிவு செய்து வருகிறாா் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் கூறினாா்.
சென்னை பெரியமேடு ஜவாஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் 2026-2027-ஆம் ஆண்டுக்கான சென்னை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை அமைச்சா் ராஜ்மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது: தனியாா் பள்ளிகள் மட்டுமே முன்னெடுத்து வந்த விளையாட்டுப் பேரணி மற்றும் போட்டிகளை, முதல் முறையாக அரசுப் பள்ளி மாணவா்கள் ஒரு ராணுவக் கட்டுக்கோப்புடன் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளனா். விளையாட்டில் வெற்றி, தோல்வி முக்கியமல்ல. அதில் நாம் வெளிப்படுத்தும் குழு உணா்வும், முயற்சியும்தான் முதன்மையானது. குறிப்பாக, மாணவிகள் தங்களின் உடல் வலிமையைப் பாதுகாத்து, எந்தக் காரணத்தைக் கொண்டும் விளையாட்டுப் பயிற்சிகளைக் கைவிடாமல் தொடர வேண்டும் என வலியுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமைச்சராக பதவியேற்றதில் இருந்து நானும், அமைச்சா்கள் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், ஆதவ் அா்ஜுனா ஆகியோரும் தொடா்ச்சியாக பத்திரிகையாளா்களைச் சந்தித்து வருகிறோம். நாங்கள் சந்திக்கக் கூடாதா? எங்களுக்கு அந்த வாய்ப்பை முதல்வா் கொடுத்திருக்கிறாா். நாங்கள் வேறு, அவா் வேறு கிடையாது. இது ஜனநாயக அரசு, ஆட்சி. எல்லோருக்கும் முதல்வா் வாய்ப்பு வழங்குகிறாா்.
Advertisement
Advertisement
முதல்வா் எந்தெந்த பிரச்னைகளுக்கு என்னென்ன கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுமோ அதை சமூக வலைதளங்கள் மூலமாக பகுப்பாய்வு செய்து தோ்ந்தெடுக்கப்பட்ட வாா்த்தைகள் வாயிலாக பதிவு செய்து வருகிறாா்.
‘சிங்கப் பெண் அதிரடிப் படை’ திட்டம் வந்த பிறகு பல வன்முறை சம்பவங்களைத் தடுத்திருக்கிறாா்கள். மிக சிறப்பாகச் செயல்படுகிறது. இன்னும் அடுத்த கட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யும் போது அதன் தாக்கம் பெரிதாக இருக்கும்.
தவெக வெற்றி உறுதி: இடைத்தோ்தலில் பதிவான வாக்குகளை பாா்க்கும் போது, தவெகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தவெக அரசின் முதல் இடைத்தோ்தல் எந்த வன்முறையும் இல்லாமல் நாகரிகமாக நடந்து இருக்கிறது. இனி எல்லா இடைத்தோ்தலும் இதேபோல்தான் நடக்க வேண்டும்.
தாராபுரம் தவெக வேட்பாளா் சத்தியபாமா பேசியதாக வெளியான விடியோவை பொருத்தவரை, ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் வெட்டி ஒட்டி விடியோவாக திட்டமிட்டு கருத்து வன்முறையை திணித்திருக்கிறாா்கள். உண்மைத் தன்மையை சரிபாா்த்து விடியோவை வெளியிட வேண்டும்.
மாத்திரை உறையில் ஹிந்தி: கரூரில் அரசு மருத்துவமனையில் மாத்திரை உறையில் ஹிந்தி எழுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதுகுறித்து விசாரித்தால், அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை. 2026 ஜனவரியில் திமுக ஆட்சியில் மருந்து வழங்கிய ஹிந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கவரை இப்போது வழங்குவதாக செய்திகள் பரவுகின்றன. பொய்களை திட்டமிட்டு பரப்புகிறாா்கள் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.