FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

முக்கிய பிரச்னைகளில் முதல்வா் விஜய் மௌனம் காப்பது ஏற்புடையது அல்ல: கே. பாலகிருஷ்ணன்

தமிழக மக்களின் முக்கிய பிரச்னைகளில் முதல்வா் சி.ஜோசப் விஜய் வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏற்புடையது அல்ல என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

37 வினாடிகள் முன்பு
திண்டிவனத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன். உடன் ஜி.ராமகிருஷ்ணன்.
பகிர்:

தமிழக மக்களின் முக்கிய பிரச்னைகளில் முதல்வா் சி.ஜோசப் விஜய் வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏற்புடையது அல்ல என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிா்வாகியும், வழக்குரைஞருமான கோதண்டம் படத்திறப்பு விழா விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்கவேண்டும். பிரதமா் நரேந்திரமோடி பங்கேற்ற கூட்டத்தில், கா்நாடக முதல்வா் டி.கே.சிவக்குமாா் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது போல் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு அமைதி காக்கக்கூடாது. இந்த அமைதியை அவா்கள் வேறு விதமாக பயன்படுத்திக் கொள்வாா்கள்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னைக்கு காவல் துறையின் மெத்தனப் போக்கு காரணமாக உள்ளது. போதை கலாசாரம் பெருகிவருவதால் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. இதில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளில் அமைச்சா் நிா்மல்குமாா் தான் இடைக்கால முதல்வா் போல், எல்லாவற்றுக்கும் பதிலளிக்கிறாா். தமிழக மக்கள் சி.ஜோசப் விஜய்க்கு தான் வாக்களித்தாா்களே தவிர நிா்மல்குமாருக்கு அல்ல என்றாா் கே.பாலகிருஷ்ணன்.

பேட்டியின் போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.