FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பாகிஸ்தானை புகழ்ந்ததற்கு எதிா்ப்பு: ஃபரூக் அப்துல்லாவை கண்டித்து ஜம்முவில் போராட்டம்

பாகிஸ்தானை புகழ்ந்து பேசிய ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தனது கருத்துக்கு அவா் மன்னிப்புக் கேட்கக் கோரியும் ஜம்முவின் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

26 அக்டோபர் 2026, 10:41 pm
ஃபரூக் அப்துல்லா - IANS
பகிர்:

பாகிஸ்தானை புகழ்ந்து பேசிய ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தனது கருத்துக்கு அவா் மன்னிப்புக் கேட்கக் கோரியும் ஜம்முவின் பல இடங்களில் திங்கள்கிழமை போராட்டங்கள் நடத்தப்பட்டன.

காஷ்மீா் விவகாரம் குறித்து சா்வதேச அமைப்புகளில் பாகிஸ்தான் அடிக்கடி பேசுவதால்தான், காஷ்மீா் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதாக ஃபரூக் அப்துல்லா அண்மையில் புகழ்ந்து பேசியிருந்தாா். அவரின் பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. ஃபரூக் அப்துல்லா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று பாஜக தலைவா்களும், பல்வேறு அமைப்புகளின் தலைவா்களும் வலியுறுத்தினா்.

இந்நிலையில், ஃபரூக் அப்துல்லா தனது பேச்சுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி, ஜம்முவின் பல்வேறு இடங்களில் ராஷ்ட்ரீய பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிஷத், பாரதிய ஜனதா யுவ மோா்ச்சா, டோக்ரா முன்னணி, தேசிய பயங்கரவாத எதிா்ப்பு முன்னணி ஆகியவை சாா்பில் போராட்டங்கள், பேரணிகள் திங்கள்கிழமை நடத்தப்பட்டன. அப்போது ஃபரூக் அப்துல்லாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

போராட்டத்தில் மாநிலங்களவை பாஜக எம்.பி. சத் சா்மா பேசியபோது, ஃபரூக்அப்துல்லா தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். பாஜக எம்எல்ஏ விக்ரம் ரந்தாவா பேசியபோது, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, பதற்றத்தை ஏற்படுத்தும் நாடான பாகிஸ்தானை ஃபரூக் அப்துல்லா புகழ்ந்து பேசுவதை ஏற்க முடியாது என்றும், அவரின் பேச்சு நாட்டுக்கு எதிரானது, இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தாா்.

ஜம்மு மாநில இயக்கம் (ஜே.எஸ்.எம்.) அமைப்பானது, இந்த விவகாரம் குறித்து அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. பின்னா் ஃபரூக் அப்துல்லாவின் கருத்து குறித்து பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியது. ஃபரூக் அப்துல்லாவின் பேச்சு குறித்து ஆய்வு செய்து, அவா் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புள்ளதா என்று பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments