FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

கரையைக் கடந்தது "அர்னாப்' புயல்: ஆந்திரத்தில் 7 பேர் உயிரிழப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்

வங்கக் கடலில் உருவான ‘அா்னாப்’ புயல், ஆந்திரத்தில் புதன்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது.

29 அக்டோபர் 2026, 3:33 am
பகிர்:

வங்கக் கடலில் உருவான "அர்னாப்' புயல், ஆந்திரத்தில் புதன்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது.

இந்தப் புயலால் நேரிட்ட அசம்பாவித சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்தனர். ஆந்திர வட கடலோர மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் கடந்த செவ்வாய்க்கிழமை மிகத் தீவிர புயலாக வலுவடைந்த "அர்னாப்' புயல், ஆந்திர கடற்கரையை நோக்கி வேகமாக நகர்ந்தது. பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்துக்கு இடையே உள்ள ஏனாம் (புதுச்சேரி நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதி) அருகே புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு தொடங்கி காலை 8 மணி வரை கரையைக் கடந்தது. காலை 8.30 மணிக்குள் முழுமையாக கரையைக் கடந்து வலுவிழக்கத் தொடங்கியது.

Advertisement

Advertisement

புயல் கரையைக் கடந்தபோது, சராசரியாக மணிக்கு 125 கி.மீ. முதல் 135 கி.மீ. வரை வேகத்தில் சூறைக்காற்று சுழன்றடித்தது. சில வினாடிகளுக்கு காற்றின் வேகம் 150 கி.மீ. வரை அதிகரித்தது. புயலின் தாக்கத்தால், பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. காக்கிநாடாவில் 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சரிந்ததாகவும், மழை-வெள்ளத்தில் உப்படா பகுதி சாலை முழுமையாக அடித்துச் செல்லப்பட்டதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிந்து மாதவ் தெரிவித்தார்.

மரங்களை வெட்டி அகற்றி, சாலைகளில் போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மின்விநியோகம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

200 மி.மீ.-க்கு மேல் மழைப்பொழிவு: புயலின் தாக்கத்தால், அனகாபள்ளி, விசாகப்பட்டினம், காக்கிநாடா, கோனசீமா, மேற்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மிக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் 200 மி.மீ.க்கு மேல் மழைப்பொழிவு பதிவானது. அதிகபட்சமாக அனகாபள்ளியில் உள்ள கண்ணுரிபலேம் பகுதியில் 261.5 மி.மீ. மழை பதிவானது.

புயல் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், உயரதிகாரிகள், மீட்புக் குழுவினருடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு காணொலி முறையில் புதன்கிழமை காலை ஆலோசனை மேற்கொண்டார். கள நிலவரம் குறித்து கேட்டறிந்த அவர், மீட்பு-நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார். நிவாரண முகாம்களில் போதிய உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை உறுதி செய்யவும், குளங்கள், கால்வாய் கரைகளின் உடைப்பைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்.

2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழப்பு: மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பீமாவரம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை மரம் விழுந்து 46 வயது நபர் உயிரிழந்தார். விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 53 வயது நபரும், இதே மாவட்டத்தில் மின்கம்பம் சரிந்து பெண் ஒருவரும் உயிரிழந்தனர். அனகாபள்ளி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரு பெண்ணும், கோனசீமா மாவட்டத்தில் சுவர் இடிந்து ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் இரு சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர்.

காக்கிநாடாவின் பாம்பே கட்டா பகுதியில் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததில் சிக்கிக் கொண்ட 4 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அர்னாப் புயலின் தாக்கத்தால், கிழக்கு கடற்கரைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மத்திய அரசுக்கு கடிதம்: இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "புயல் பாதிப்புகளை எதிர்கொள்வதில் மத்திய அரசு வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி. தேசிய பேரிடர் மீட்புப் படை உள்பட மத்திய முகமைகளின் ஆதரவு தொடர்ந்து அவசியமாகிறது. சேத விவரங்கள் குறித்த விரிவான அறிக்கையை மாநில அரசு சமர்ப்பித்ததும், மத்தியக் குழுவை விரைந்து அனுப்பிவைப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். முதல்கட்ட மதிப்பீட்டின்படி, 70,900 ஹெக்டேர் பரப்பில் நெல் உள்ளிட்ட பயிர்களும், 10,450 ஹெக்டேர் தோட்டப் பயிர்களும் சேதமடைந்துள்ளன' என்று தெரிவித்துள்ளார்.

13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: அர்னாப் புயலின் தாக்கத்தால், ஆந்திரத்தின் பாபட்லா, குண்டூர், என்டிஆர், கிருஷ்ணா, எலூரு, கிழக்கு கோதாவரி, காக்கிநாடா, அல்லூரி சீதாராம ராஜு, விசாகப்பட்டினம், அனகாபள்ளி உள்பட 13 மாவட்டங்கள் மற்றும் ஏனாமில் வியாழக்கிழமை வரை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ஒடிஸாவில் பலத்த மழை

ஆந்திரத்தில் புதன்கிழமை கரையைக் கடந்த அர்னாப் புயல் படிப்படியாக வலுவிழந்து ஒடிஸாவை நோக்கி நகர்ந்தது. புயலின் தாக்கத்தால், ஒடிஸாவின் தென் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் உஷார்படுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கஞ்சம், கஜபதி, ராயகடா, கோராபுத், மால்கன்கிரி, நபரங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 30,000}க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் கஜபதி மாவட்டத்தின் மகேந்திரகர் பகுதியில் அதிகபட்சமாக 249.9 மி.மீ. மழை பதிவானது. தேசிய}மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் உள்பட 300}க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஜார்க்கண்டில் பள்ளிகளுக்கு விடுமுறை: அர்னாப் புயலால், ஜார்க்கண்டில் ராஞ்சி, மேற்கு சிங்பூம், கிழக்கு சிங்பூம் உள்ளிட்ட மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு சனிக்கிழமை (அக்.29) வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில்..: மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, புர்பா மேதினிபூர், தெற்கு 24 பர்கானா, ஜார்கிராம், பச்சிம் மேதினிபூர், பங்குரா, புர்லியா ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, இந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மோசமான வானிலையால், கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு விமானச் சேவைகள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments