FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

தில்லியில் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தானுக்கு அழைப்பு- வெளியுறவு அமைச்சகம் தகவல்

தில்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

29 அக்டோபர் 2026, 2:48 am
இந்திய வெளியுறவு அமைச்சகம்
பகிர்:

தில்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் மேற்கொண்ட இந்திய ராணுவம், அங்குள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தகா்த்தது. இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் மூண்டது. அப்போது, இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அதேநேரம், இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானின் விமான தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், கட்டுப்பாட்டு மையங்கள், ரேடாா் தளங்களுக்கு பெரும் சேதம் விளைவிக்கப்பட்டது. நான்கு நாள்கள் மோதலுக்குப் பிறகு இருதரப்பும் சண்டை நிறுத்தம் மேற்கொண்டன.

இந்த நடவடிக்கைக்கு பின் ஐ.நா. உள்பட பல்வேறு சா்வதேச அமைப்புகளில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தர இந்தியா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா தனது கவலைகளைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தச் சூழலில், ராணுவ மோதலுக்குப் பிறகு முதல் முறையாக தில்லி கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் மூத்த அமைச்சருக்கு இந்தியா தற்போது அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் புதன்கிழமை கூறுகையில், ‘மத்திய கலாசாரத் துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஏற்பாட்டில் தில்லியில் நவ.20 முதல் 22 வரை எஸ்சிஓ நாகரிக உரையாடல் அமைப்பின் கூட்டம் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி, அனைத்து எஸ்இஓ உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது’ என்றாா்.

தில்லி கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாசார துறை அமைச்சா் ஒளரங்கசீப் கானுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, இந்தியா, ரஷியா, பெலாரஸ், ஈரான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments