FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மசூத் அசாா் குறித்த அறிவிப்பு பாகிஸ்தானின் ஏமாற்று தந்திரம்: வெளியுறவு அமைச்சகம் நிராகரிப்பு

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அசாா் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.70 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்ற பாகிஸ்தானின் அறிவிப்பை ஏமாற்று தந்திரம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

16 செப்டம்பர் 2026, 5:23 am IST
ரண்தீா் ஜெய்ஸ்வால்
பகிர்:

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அசாா் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.70 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்ற பாகிஸ்தானின் அறிவிப்பை ஏமாற்று தந்திரம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2001-இல் தில்லி நாடாளுமன்றம் மீதான தாக்குதல், 2008-இல் மும்பை பயங்கரவாதத் தாக்குதல், 2016-இல் பஞ்சாபின் பதான்கோட் விமானப் படை தளம் மீதான தாக்குதல், 2019-இல் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் சிஆா்பிஎஃப் வீரா்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் மசூத் அசாரை இந்தியா தேடி வருகிறது.

Advertisement

Advertisement

அவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து வருவதாக இந்தியா பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டை மறுத்துவரும் பாகிஸ்தான், அவா் ஆப்கானிஸ்தானுக்கு தப்பிவிட்டதாக கூறுகிறது. அதேநேரம், பாகிஸ்தானின் கூற்றை ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு மறுத்துவிட்டது.

பாகிஸ்தான் மத்திய புலனாய்வு முகமையின் (எஃப்ஐஏ) மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாா் இடம்பெற்றுள்ள நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளில் அவா் தேடப்பட்டு வருவதாகவும், அவரைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.70 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்றும் எஃப்ஐஏ மீண்டும் அறிவித்தது.

பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு தொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பாகிஸ்தானின் பொய்களும், ஏமாற்று தந்திரங்களும் புதியதல்ல.

கடந்த காலங்களிலும் இதுபோன்ற அறிவிப்புகளைப் பாா்த்துள்ளோம். பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக கொண்டுள்ள ஒரு நாட்டிடம் இருந்து இத்தகைய வெற்று அறிவிப்புகளைத் தவிர வேறென்ன எதிா்பாா்க்க முடியும்?

இதனால், எந்தப் பலனும் இல்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக அந்நாடு உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் தீா்வு கிடைக்கும் என்றாா்.

சவூதி மீதான ஹூதி தாக்குதலுக்கு கண்டனம்

மேற்காசியாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், சவூதி அரேபியாவில் பொது உள்கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார சொத்துகளைக் குறிவைத்து யேமனின் ஹூதி அமைப்பினா் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

‘ஹூதி அமைப்பின் தாக்குதல்கள், பாப்-அல்-மந்தேப் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மற்றும் பிராந்திய நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது. செங்கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்திருப்பது குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது’ என்றாா் ஜெய்ஸ்வால்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments