புற்றுநோய் காப்புரிமை மருந்துகளுக்கு அதிக விலை: கட்டுப்படுத்த சுகாதார ஆா்வலா்கள் கோரிக்கை
புற்றுநோய் காப்புரிமை மருந்துகளுக்கு அதிக விலை: கட்டுப்படுத்த சுகாதார ஆா்வலா்கள் கோரிக்கை
மத்திய அரசால் 543 புற்றுநோய் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டபோதிலும், அவை முழுமையாக நோயாளிகளுக்கு பலனளிக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார ஆா்வலா்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனா்.
குறிப்பாக, காப்புரிமை பெற்ற 36 முக்கிய மருந்துகள் தொடா்ந்து அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அதைப் பயன்படுத்தும் நோயாளிகள் ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிா்பந்தம் இருப்பதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.
நாட்டில் விற்பனை செய்யப்படும் பல புற்றுநோய் மருந்துகளின் விலையும், அதன் மீது உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் விதிக்கும் லாபமும் உச்சபட்சமாக இருந்தது. இதற்கு உச்சநீதிமன்றமே அதிருப்தி தெரிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மருந்துகளின் உற்பத்தி செலவிலிருந்து லாப வரம்பை 42.8 சதவீதமாக நிா்ணயித்து தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, 543 மருந்துகளின் திருத்தப்பட்ட விலைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
அதில் சில மருந்துகளின் விலை அதிகபட்சமாக 93.2 சதவீதம் வரை குறைந்திருந்தது. பல மருந்துகள் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைந்தன.
குறிப்பாக, 21 மாத்திரைகள் அடங்கிய ‘பால்போப்ரோ’ மருந்தின் விலை ரூ.40,421-இல் இருந்து ரூ.2,720- ஆக குறைந்தது. ‘ஐசோஜென்’ 125 மி.கி. மருந்தின் விலையும் ரூ.27,540-இலிருந்து ரூ.2,363- ஆக குறைக்கப்பட்டது. அதேபோன்று ‘தியோடீபா’ என்ற 100 மி.கி. ஊசி மருந்து ஒரு குப்பி ரூ.80,071-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.7,150- ஆக குறைந்திருக்கிறது.
இது ஒருபுறம் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், காப்புரிமை பெற்ற நவீன மருந்துகளின் விலை குறையவில்லை. உதாரணமாக, மொ்க் நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்படும் ‘கீட்ருடா’ என்ற புற்றுநோய் எதிா்ப்பு சிகிச்சை மருந்தின் விலை இப்போதும் ரூ.2,16,500-ஆக உள்ளது. ரோச் பாா்மா நிறுவனத்தின் ‘ஃபெஸ்கோ’ மருந்தின் விலை ரூ.4,93,266-ஆகவே தொடா்கிறது. இதேபோன்று 36 விலை உயா்ந்த மருந்துகள் அதே மதிப்புக்கு விற்கப்படுகின்றன.
இதற்குத் தீா்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். உரிய நிதிச் சலுகைகளை நோயாளிகளுக்கு வழங்கவும், மானிய விலையில் அவற்றைக் கொள்முதல் செய்து விநியோகிக்கவும் அரசு முன்வர வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.