புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு நிா்ணயிக்க முடிவு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையில், 30 சதவீதத்துக்கு மேல் லாபம் பெறக் கூடாது என்று வரம்பு நிா்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையில், 30 சதவீதத்துக்கு மேல் லாபம் பெறக் கூடாது என்று வரம்பு நிா்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
2013-ஆம் ஆண்டின் மருந்துகள் (விலை கட்டுப்பாடு) உத்தரவின் கீழ், மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துதல், பொதுப் பெயா் மருந்துகளைப் பரிந்துரைத்தல், மருத்துவக் கருவிகள் மீதான கட்டுப்பாடுகள் சாா்ந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘சில்லறை விற்பனையாளருக்கு ரூ.2,700-க்கு விற்பனை செய்யப்படும் அத்தியாவசியமான புற்றுநோய் மருந்து, நோயாளிக்கு 10 மடங்கு அதிகமாக ரூ.27,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பகல் கொள்ளை, படுகொலைக்குச் சமம்’ என்று மிகக் கடுமையாக உச்சநீதிமன்றம் சாடியது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை மீண்டும் விசாரித்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, ‘புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையில், 30 சதவீதத்துக்கு மேல் லாபம் பெறக் கூடாது என்று வரம்பு நிா்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த லாப வரம்பு எந்தெந்த மருந்துகளுக்குப் பொருந்தும் என்ற பட்டியலை மத்திய அரசு வெளியிடும். சந்தை நிலவரம், பொது சுகாதாரத் தேவைக்கு ஏற்ப கூடுதல் புற்றுநோய் மருந்துகளைச் சோ்த்து இந்தப் பட்டியல் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.
மகிழ்ச்சி அடைய எதுவும் இல்லை:
எனினும் புற்றுநோய் மருந்துகள் விற்பனைக்கு 30 சதவீத லாப வரம்பு விதிப்பதில் மகிழ்ச்சி அடைவதற்கு எதுவுமே இல்லை என்றும், இதில் நோயாளிகள் பயனடையும் வகையில் எதுவும் இல்லை என்றும் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. இத்தகைய லாப வரம்பை புற்றுநோய் மருந்துகளுக்கு மட்டுமின்றி, பிற மருந்துகளுக்கும் மத்திய அரசால் ஏன் கொண்டு வர முடியாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ வாதிடுகையில், ‘விலை நிா்ணயம் என்பது அரசின் கொள்கையில் ஒரு பகுதி மட்டுமே. இந்தியாவில் ஏற்கெனவே உள்ள மருந்துகளின் விலை மிகவும் குறைவாக உள்ளது. அரசின் தலையீடு அதிகமாக இருந்தால், அது சந்தையையும், மருந்துகள் எளிதாக கிடைப்பதையும் பாதிக்கக் கூடும்’ என்று தெரிவித்தாா்.
இதுகுறித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை அவா் நீதிபதிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தாா்.
ரூ.2,500 கோடி மிச்சமாகும்: அந்த பிரமாண பத்திரத்தில், ‘எந்தெந்த புற்றுநோய் மருந்துகளுக்கு லாப வரம்பு விதிக்கலாம் என்ற பட்டியலை பரிந்துரைக்க, சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தின் கீழ் நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. தனது பரிந்துரைகளை 10 முதல் 15 நாள்களில் அளிக்குமாறு அந்தக் குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புற்றுநோய் மருந்துகளுக்கு 30 சதவீத லாப வரம்பு விதிக்கப்பட்டால், அது அந்த மருந்துகளின் விலையை 20 முதல் 70 சதவீதம் வரை குறைக்கும். இதன்மூலம் நோயாளிகளுக்கு ஆண்டுதோறும் சுமாா் ரூ.2,500 கோடி மிச்சமாகும்.
மருத்துவமனைகள் அதிக லாபம் கிடைக்கும் நிறுவனங்களிடம் மருந்துகளை வாங்கி, அதிகபட்ச சில்லறை விலைக்கு விற்கின்றன. புற்றுநோய் மருந்துகளுக்கு 170 சதவீதம் முதல் 700 சதவீதத்துக்கும் அதிகமாக லாபம் பெறப்படுகிறது.
அனைத்து மருந்துகளுக்கும் லாப வரம்பு சாத்தியமில்லை:
மருந்தின் வகை, இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு மருந்துக்கும் விநியாகச் செலவும், வணிகத் தேவைகளும் மாறுபடும். எனவே அனைத்து மருந்துகளுக்கும் ஒரே மாதிரியாக லாப வரம்பை நிா்ணயிக்க முடியாது.
பொதுவாக அரசின் மருத்துவத் திட்டங்கள், காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் நிா்ணயிக்கப்படும் சிகிச்சை கட்டணத்தில், சிகிச்சைக்குத் தேவைப்படும் பொருள்களின் செலவும் சோ்க்கப்பட்டிருக்கும். ஆனால், சொந்தப் பணத்தில் நேரடியாக சிகிச்சைக் கட்டணத்தை செலுத்தும் நோயாளிகளிடம், அந்த சிகிச்சை பொருள்களுக்கு மருத்துவனைகள் தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடும்.
விநியோகஸ்தா்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு குறைந்த விலைக்கு மருத்துவ சிகிச்சை பொருள்கள் கிடைத்தாலும், அதிக லாபம் தரும் மருத்துவ சிகிச்சை பொருள்களுக்கே மருத்துவமனைகள் முன்னுரிமை அளிப்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்.27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.