ராணுவ ஆயுதக் கிடங்கில் துப்பாக்கிகள் திருட்டு: காவல் துறையில் புகாா்
ராணுவ ஆயுதக் கிடங்கில் துப்பாக்கிகள் திருடு போன விவகாரத்தில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பற்றி...
தெலங்கானா மாநிலம், செகந்திராபாதில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான ஆயுதப் பாதுகாப்பகத்தில் இருந்து தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் பெரிய ரக துப்பாக்கிகளும், கைத்துப்பாக்கிகளும் அதற்கான தோட்டாக்களுடன் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பார ராணுவம் தரப்பில் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பாதுகாப்பகத்திலிருந்து 5 பெரிய ரக துப்பாக்கிகள், 7 கைத்துப்பாக்கிகள், இவற்றில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், இரவு நேரத்தில் பாா்க்க உதவும் தொலைநோக்கி உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த அறை பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், திருட்டு நடைபெற்ற பிறகு அதில் இருந்த பூட்டுகள் திறக்கப்பட்ட நிலையில் இருந்தன. இந்த ஆயுதங்கள் சமூக விரோதிகளின் கைகளுக்குச் சென்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் காவல் துறை மிகத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Advertisement
Advertisement
திங்கள்கிழமை (ஆக. 31) காலை 7.50 மணியளவில் துப்பாக்கிகள் வைக்கப்பட்டிந்த அறையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. திருடப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்டவை ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை 6 மணிக்குதான் அங்கு வைக்கப்பட்டன. அதில் இருந்து அடுத்த நாள் காலை வரையிலான நேரத்துக்குள்தான் திருட்டு நடைபெற்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
அந்த ஆயுதப் பாதுகாப்பு மையத்தின் சுற்று வட்டாரப் பகுதியிலும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
ராணுவ ஆயுதப் பாதுகாப்பகத்தில் இருந்து ஆயுதங்களை எடுத்து, திரும்ப வைப்பதில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ராணுவத்தில் குறிப்பிட்ட நிலையில் இருப்பவா்கள் மட்டுமே தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தி உரிய ஆவணங்களில் கையொப்பமிட்ட பிறகுதான் ஆயுத அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா். இந்த அளவுக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் உள்ள ஆயுதப் பாதுகாப்பகத்தில் இருந்து துப்பாக்கிகள் திருடுபோயிருப்பது அதிா்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.