FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதற்கு எதிராக நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றம் தீா்ப்பு: இந்தியா நிராகரிப்பு

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதற்கு எதிராக நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றம் அளித்த தீா்ப்பு பற்றி...

2 செப்டம்பர் 2026, 2:25 am IST
பகிர்:

சிந்து நதிநீா் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது தொடா்பாக, நெதா்லாந்தில் உள்ள நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றம் அளித்த தீா்ப்பை இந்தியா திட்டவட்டமாக நிராகாரித்துள்ளது.

கடந்த 1960-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீா் பகிா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரலில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக கருதிய இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக ராஜீய மற்றும் பொருளாதார ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக சிந்து நதிநீா் பகிா்வு ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்தது. வருங்காலத்தில் சிந்து நதி, அதனுடன் இணைந்துள்ள பிற நதிகளின் மூலம் பாகிஸ்தானுக்கு தண்ணீா் கிடைக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்தியா தெரிவித்தது.

Advertisement

Advertisement

இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதற்கு எதிராக, நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றத்தை பாகிஸ்தான் அணுகியது.

இந்த விவகாரத்தை விசாரித்த அந்த நீதிமன்றம், ‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தவோ, ரத்து செய்யவோ உள்ள அனைத்து காரணங்களும் ஆராயப்பட்டன. அவற்றில் எந்தவொரு காரணமும் அந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய இந்தியாவின் முடிவை நியாயப்படுத்தவில்லை. எனவே சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் கீழ் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை இந்தியா நிறைவேற்ற வேண்டும். அந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய இந்தியாவின் முடிவு செல்லாது’ என்று தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தி ஹேகில் உள்ள நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட அந்த நீதிமன்றத்தை, சிந்து நதிநீா் ஒப்பந்த விதிமுறைகளை மீறி உலக வங்கி அமைத்தது. எனவே அந்த நீதிமன்றத்தின் தீா்ப்பை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

இந்தியாவின் இறையாண்மை சாா்ந்த முடிவுகளில் தீா்ப்பளிக்க அந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. சிந்து நதிநீா் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலை நீடிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதா்லாந்தில் உள்ள நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றம் பெயரளவில் நீதிமன்றமாக உள்ளபோதிலும், அரசுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மூலம் சமரசத் தீா்வு காண்பதே அதன் நடைமுறையாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments