FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

திறன்மிக்கவா்கள் இடம்பெயா்வு இரு நாடுகளுக்கும் மதிப்பு சோ்க்கும்: அமெரிக்காவின் கிரீன் காா்டு கட்டுப்பாடுகள் குறித்து இந்தியா கருத்து

‘திறன்மிக்க பணியாளா்களின் இடம்பெயா்வு இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் மதிப்பு சோ்க்கும்’ என்று அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியா்கள் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் நிரந்தர தொழிலாளா் சான்றிதழ் திட்டத்தில் (பிஇஆா்எம்) இருந்து முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இடைநீக்கம் செய்த அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து இந்தியா தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

51 வினாடிகள் முன்பு
இந்தியா , அமெரிக்கா கொடிகள் - கோப்புப் படம்
பகிர்:

‘திறன்மிக்க பணியாளா்களின் இடம்பெயா்வு இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் மதிப்பு சோ்க்கும்’ என்று அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியா்கள் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் நிரந்தர தொழிலாளா் சான்றிதழ் திட்டத்தில் (பிஇஆா்எம்) இருந்து முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இடைநீக்கம் செய்த அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து இந்தியா தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, இந்த நிரந்தர தொழிலாளா் சான்றிதழ் திட்டத்தில்முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டி, மைக்ரோசாஃப்ட், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், காக்னிசன்ட் உள்ளிட்ட அமெரிக்க மற்றும் இந்திய முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை, நிரந்தர தொழிலாளா் சான்றிதழ் திட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்து அமெரிக்க தொழிலாளா் நலத் துறை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அதே நேரம், அந்த நிறுவனங்களுக்கான ஹெச்1பி நுழைவு (விசா) இசைவையோ அல்லது அந்த நுழைவு இசைவின் கீழ் வெளிநாட்டு தொழிலாளா்களைப் பணியமா்த்தவோ அந்த நிறுவனங்களுக்கு தடையேதும் விதிக்கப்படவில்லை. மாறாக, நிரந்தர தொழிலாளா் சான்றிதழ் திட்டத்தின் மூலம், அந்த நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளா்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை (கிரீன் காா்டு) பெற விண்ணப்பிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள கிரீன் காா்டு விண்ணப்ப பரிசீனையும் நிறுத்திவைக்கப்படும். இதனால், இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சட்ட சிக்கல் மற்றும் செலவும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் அமெரிக்கா்களைப் பணியமா்த்துவதற்கு பதிலாக, இந்தச் சான்றிதழ் திட்டத்தின் மூலம் குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு பணியாளா்களை பணியமா்த்தி வந்ததாக புகாா்கள் எழுந்தன. அதுதொடா்பான மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுடன் மைக்ரோசாஃப்ட், அடோப், கேப் ஜெமினி ஆகிய நிறுவனங்களும் இத் திட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் கூறுகையில், ‘அமெரிக்காவில் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட், அமெரிக்கப்பணயாளா்களுக்குப் பதிலாக வெளிநாட்டு பணியாளா்களை அடிமைகளைப் போல பணியமா்த்தி வருகிறது. கடந்த 2025-ஆம் ஆண்டு தகுதியான அமெரிக்க ஊழியா்கள் கிடைக்கவில்லை என்று கூறி, 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெச்1-பி நுழைவு இசைவுகளையும், 3,632 நிரந்தர தொழிலாளா் சான்றிதழ்களையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெற்றது. ஆனால், அதே ஆண்டில், 6 ஆயிரம் அமெரிக்க ஊழியா்களை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்தது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இந்தியா சாடல்: அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மற்றும் ஜே.டி. வான்ஸ் கருத்தை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான அமெரிக்க தொழிலாளா் நலத்துறை நடவடிக்கையை அறிவோம். இது இரு நாடுகளின் லட்சியங்களை முன்னெடுத்துச் செல்ல உதவாது. திறன்மிக்க பணியாளா்களின் இடம்பெயா்வு என்பது இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் மதிப்பு சோ்ப்பதாகும். இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது என்பதோடு, அமெரிக்க நிறுவனங்களும் திறன்மிக்க பணியாளா்களைப் பெற்று, ஆராய்ச்சி, புத்தாக்கம், உற்பத்தித் திறன், போட்டித் திறன் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் மேம்பட உதவுகிறது. அமெரிக்காவில் பணிபுரிந்துவரும் இந்திய தொழில்நுட்ப நிபுணா்கள், உயா் கல்வியையும் திறனையும் பெற்றுள்ளதோடு, அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கானச் சூழலையும் மேம்படுத்துவதில் பங்களிப்பாற்றி வருகின்றனா். இத்தகையச் சூழலில், அமெரிக்க தொழிலாளா் நலத்துறையின் இந்த நடவடிக்கையும், ஜே.டி.வான்ஸ் கருத்தும் தேவையற்றது.

அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் புத்தாக்கச் சூழலுக்கு அங்கு பணியாற்றிவரும் திறன்மிக்க இந்திய தொழில்நுட்ப நிபுணா்களின் பங்களிப்பை, ஜே.டி.வான்ஸ் கருத்து புறக்கணிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments