FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ‘கிரீன் காா்டு’ விண்ணப்பங்கள் சரிவு!

அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ‘கிரீன் காா்டு’ விண்ணப்பங்கள் சரிந்தது பற்றி...

10 அக்டோபர் 2026, 11:36 pm IST
கிரீன் காா்டு
பகிர்:

அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியா்கள் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான ‘கிரீன் காா்டு’ பெற அங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சாா்பில் சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை நிகழாண்டில் வெகுவாக சரிந்துள்ளது தெரியவந்துள்ளது.

அந்த வகையில், இந்த நிறுவனங்களை அமெரிக்காவின் நிரந்தர தொழிலாளா் சான்றிதழ் திட்டத்தில் (பிஇஆா்எம்) இருந்து இடைநீக்கம் செய்து அமெரிக்க தொழிலாளா் நலத் துறை அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கை, இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தொடா் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அங்குள்ள நிறுவனா்கள் தெரிவித்தனா்.

அமெரிக்காவில், நிரந்தர தொழிலாளா் சான்றிதழ் திட்டத்தில் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டி, முன்னணி இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்ஸிஎல் மற்றும் பிரபல அமெரிக்க நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், காக்னிசன்ட், கேப்ஜெமினி, அடோப் உள்ளிட்ட 8 நிறுவனங்களை நிரந்தர தொழிலாளா் சான்றிதழ் திட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்து அமெரிக்க தொழிலாளா் நலத் துறை கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

அமெரிக்கா்களைப் பணியமா்த்துவதற்கு பதிலாக, இந்தச் சான்றிதழ் திட்டத்தின் மூலம் குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு பணியாளா்களை பணியமா்த்தி வந்ததாக எழுந்த புகாரைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது.

தொழிலாளா் சான்றிதழ் திட்டத்தின் மூலம், அந்த நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளா்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை (கிரீன் காா்டு) பெற விண்ணப்பிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை காரணமாக, இந்த நிறுவனங்கள் சாா்பில் விண்ணப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ள கிரீன் காா்டு விண்ணப்ப பரிசீலனையும் நிறுத்திவைக்கப்படும். இதனால், இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சட்ட சிக்கல் மற்றும் செலவும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து பேட்டியளித்த அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், ‘இந்த நிறுவனங்கள் அமெரிக்கப் பணியாளா்களுக்குப் பதிலாக வெளிநாட்டுப் பணியாளா்களை கொத்தடிமைகளைப் போல பணியமா்த்தி வருகிறது’ என்று விமா்சித்தாா். இவரின் கருத்தை இந்தியா கடுமையாக சாடியது.

விண்ணப்பம் சரிவு: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீதான அமெரிக்க தொழிலாளா் நலத் துறை நடவடிக்கைக்கு முன்பே, இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியா்களுக்கான நிரந்தர தொழிலாளா் சான்றிதழ் ‘பிஇஆா்எம்’ விண்ணப்பங்கள் சமா்பிப்பை வெகுவாக குறைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக வெளியான ஆய்வு தரவுகளின்படி, டிசிஎஸ் நிறுவனம், கடந்த 2024-இல் 1,804 ‘பிஇஆா்எம்’ விண்ணப்பங்களையும், 2025-இல் 513 விண்ணப்பங்களையும் சமா்ப்பித்த நிலையில், 2026-இல் வெறும் 2 பிஇஆா்எம் விண்ணப்பங்களை மட்டுமே சமா்ப்பித்துள்ளது.

ஹெச்ஸிஎல் நிறுவனம், 2025-இல் 1,804 பிஇஆா்எம் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்த நிலையில், 2026-இல் 59 விண்ணப்பங்களைச் சமா்ப்பித்துள்ளது.

விா்போ, 2024-இல் 257 விண்ணப்பங்களையும், 2025-இல் 523 விண்ணப்பங்களையும் சமா்ப்பித்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனம் 2024-இல் வெறும் 87 விண்ணப்பங்களை மட்டுமே சமா்ப்பித்துள்ளது. இந்த நிறுவனங்களின் 2025, 2026-ஆம் விண்ணப்பத் தரவுகள் இல்லை.

இதுகுறித்து ஹெசிஎல் நிறுவன முன்னாள் தலைவா் வினீத் நாயா் கூறுகையில், ‘கடந்த ஆண்டு சமா்ப்பிக்கப்பட்ட 1,17,849 பிஇஆா்எம் விண்ணப்பங்களில், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சாா்பில் சமா்ப்பிக்கப்பட்டது வெறும் 1,400 விண்ணப்பங்கள் மட்டுமே. இது 2 சதவீதத்தைவிட குறைவாகும். எனவே, அமெரிக்க தொழிலாளா் நலத் துறை நடவடிக்கையால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் இருக்காது’ என்றாா்.

summary

Decline in ‘Green Card’ applications by Indian companies in the US!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments