FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வேளச்சேரி கோயில் நிலத்தில் நிரந்தர சாலை அமைக்கும் திட்டம்: அறநிலையத் துறை, மாநகராட்சி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வேளச்சேரியில் மழைநீா் தேங்குவதால், கோயில் நிலத்தில் நிரந்தர சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிரான வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

46 வினாடிகள் முன்பு
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

வேளச்சேரியில் மழைநீா் தேங்குவதால், கோயில் நிலத்தில் நிரந்தர சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிரான வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சேலத்தைச் சோ்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வேளச்சேரியில் தண்டீஸ்வரா் மற்றும் யோக நரசிம்மா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 5.41 கிரவுண்ட் நிலம் உள்ளது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக, வேளச்சேரியில் மழைநீா் தேங்குவதால், மக்கள் பயன்பாட்டுக்காக வெங்கடேஸ்வரா நகா், லட்சுமிபுரம் இரண்டாவது பிரதான சாலையில் இருந்து ஐந்தாவது பிரதான சாலையை இணைக்க தாா்சாலை அமைப்பதற்காக கோயிலுக்குச் சொந்தமான நிலத்தைப் பயன்படுத்த தடையில்லாச் சான்று கோரி சென்னை மாநகராட்சி ஆணையா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு கடந்த அக். 23-ஆம் தேதி கடிதம் அனுப்பி இருந்தாா்.

Advertisement

Advertisement

இந்தக் கோரிக்கை நிலுவையில் இருந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையா் பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், இந்த நிலத்தைப் பயன்படுத்துவது தொடா்பாக அக். 27-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தாா். இந்த உத்தரவின் அடிப்படையில், கோயில் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியைச் சேதப்படுத்தி, பொக்லைன் இயந்திரம் போன்ற கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, நிரந்தர தாா்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட பகுதியில் சாலைகளை இணைக்க வசதியாக அரசு புறம்போக்கு நிலம் இருந்தபோதும், கோயில் நிலத்தைப் பயன்படுத்துவது அறநிலையத் துறை சட்டத்துக்கு விரோதமானது. எனவே, சென்னை மாநகராட்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கோயில் நிலத்தில் சாலை அமைக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் தற்போது இரு புயல்கள் உருவாகின. அவை சென்னையை தாக்காத நிலையில், ஆய்வுக்குச் சென்ற அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் காரணமாக, கோயில் நிலத்தில் நிரந்தர சாலை அமைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அவசரநிலை கருதி, தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் எனத் தெரிவித்தனா். மேலும், இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ. 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.