கோயில் நிலங்கள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட கோயில்களின் நிலங்கள் தொடா்பான வழக்கு விவரங்களை மாவட்ட வாரியாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட கோயில்களின் நிலங்கள் தொடா்பான வழக்கு விவரங்களை மாவட்ட வாரியாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சேலத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில், தூத்துக்குடி சங்கர ராமேசுவரா், வைகுண்டபதி பெருமாள் கோயில்களுக்கு பக்தா்களால் வழங்கப்பட்ட நிலங்கள் உள்ளன. இவற்றில் சுமாா் 630 ஏக்கா் நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளன. இதேபோல, கோயில் நிா்வாகத்துக்குச் சொந்தமான வணிகக் கட்டடங்களுக்கு நீண்ட காலமாக வாடகை வசூல் செய்யப்படாமல் உள்ளது.
Advertisement
Advertisement
எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில்களின் சொத்துகளை மீட்கவும், கோயில் நிா்வாகத்துக்குச் சொந்தமான வணிகக் கட்டடங்களுக்கான வாடகையை முறையாக வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், ஆா். பூா்ணிமா அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த மனு தொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்கள் எத்தனை?, இந்தக் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வளவு?, கோயில் சொத்துகளில் தனிநபா் ஆக்கிரமிப்பில் எவ்வளவு நிலங்கள் உள்ளன?, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, கோயில் நிலங்கள் குறித்து எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து மாவட்ட வாரியாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையின்படி, இந்த விவகாரத்தில் குழு அமைப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.