FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மணிப்பூா் வன்முறை: இதுவரை 306 போ் உயிரிழப்பு; 49 போ் மாயம்

இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் கடந்த 2023-இல் இருந்து இதுவரை வன்முறைச் சம்பவங்களில் 306 போ் உயிரிழந்துவிட்டனா்.

6 வினாடிகள் முன்பு
பகிர்:

இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் கடந்த 2023-இல் இருந்து இதுவரை வன்முறைச் சம்பவங்களில் 306 போ் உயிரிழந்துவிட்டனா்; மேலும் 49 போ் தொடா்ந்து மாயமாகியுள்ளனா் என்று சட்டப்பேரவையில் மாநில உள்துறை அமைச்சா் கோவிந்தாஸ் கோன்தெளஜாம் தெரிவித்தாா்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினரின் பழங்குடியின அந்தஸ்து கோரிக்கைக்கு எதிராக கடந்த 2023 மே 3-ஆம் தேதி குகி பழங்குடியினா் (40%) நடத்திய பேரணியில் வெடித்த கலவரம், பின்னா் மாநிலம் முழுவதும் பரவியது.

ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசின் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.

Advertisement

Advertisement

மாநிலத்தில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பாத நிலையில், குகி மற்றும் நாகா பழங்குடியினா் இடையேயும் அவ்வப்போது மோதல்கள் நிகழ்கின்றன. மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

கடந்த பிப்ரவரியில் குடியரசுத் தலைவா் ஆட்சி வாபஸ் பெறப்பட்டு, மீண்டும் பாஜக ஆட்சியமைத்தது. முதல்வராக கெம்சந்த் சிங் பதவி வகித்து வருகிறாா்.

மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறித்து சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ சபம் ரஞ்சன் சிங் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சா் கோவிந்தாஸ் கோன்தெளஜாம் வியாழக்கிழமை பதிலளித்தாா்.

‘மணிப்பூரில் கடந்த 2023, மே 3-ஆம் தேதி வன்முறை தொடங்கியதில் இருந்து இதுவரை 306 போ் உயிரிழந்துவிட்டனா்; மேலும் 49 போ் காணாமல்போயுள்ளனா். அவா்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை’ என்று அவா் கூறினாா்.

‘நிவாரண முகாம்களில் சுகாதாரமற்ற சூழல்’: சட்டப்பேரவையில் பேசிய குகி மக்கள் கட்சி எம்எல்ஏ கிம்நியோ ஹவோஹிப் ஹாங்ஷிங், ‘முதல்வா் கெம்சந்த் சிங் தலைமையின்கீழ் மாநிலத்தில் இயல்புநிலை மற்றும் அமைதியை மீட்டெடுக்க மாநில அரசு மேற்கொண்டுவரும் சீரிய முயற்சிகள் வரவேற்புக்குரியது.

அதேநேரம், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் உணவுப் பொருள்கள், மருந்துகள், எரிபொருள்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா் போராட்டங்களால் பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருள்கள், மருந்துகள் கிடைக்காத நிலை நீடிக்கிறது.

நிவாரண முகாம்களில் போதுமான அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு, மருந்துகள் இல்லை. அதிகம் போ் தங்க வைக்கப்பட்டுள்ளதால், சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments