சட்டவிரோத பார்க்கிங்குக்கு செக்! ஒரே வாரத்தில் ரூ. 1.08 கோடி அபராதம்!
பார்க்கிங் விதிமீறல் தொடர்பாக 32,385 வாகனங்களுக்கு அபராதம் விதித்தது பற்றி..
கேரளத்தில் ஒரே வாரத்தில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தியதற்காக 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ. 1.08 கோடி அபராத தொகையைக் கேரளக் காவல்துறையின் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புப் பிரிவு வசூலித்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல், போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல் மற்றும் விபத்துகளைத் தடுத்தல் ஆகிய நோக்கங்களுடன் செப். 9 முதல் 15 வரை இந்தச் சிறப்புச் சோதனை நடத்தப்பட்டது.
வாகன விதிமீறல்களில், மாநில நெடுஞ்சாலைகளில் 8,764 பேரும், தேசிய நெடுஞ்சாலைகளில் 8,441 பேரும், பிற சாலைகளில் 15,180 பேரும் என மொத்தம் 32,385 பேர் சட்டவிரோத முறையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
விபத்துகள் அதிகம் நிகழும் பகுதிகள், அதிக போக்குவரத்து உள்ள சாலைகள், முக்கியச் சந்திப்புகள் மற்றும் சர்வீஸ் சாலைகள் ஆகியவற்றில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
விதிமுறையற்ற வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், குறிப்பாகத் தேசிய நெடுஞ்சாலைகளில் அவசரச் சிகிச்சைக்காக விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதிலும் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று காவல்துறை தெரிவித்தது.
மாநிலம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவினர் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ளவும், விதிமீறல்களைத் திரும்பத் திரும்பச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புப் பிரிவு உத்தரவிட்டுள்ளதாகக் காவல்துறை கூறியது.
போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புப் பிரிவுக்கான காவல்துறைத் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், போக்குவரத்து வடக்கு மற்றும் தெற்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளர்களின் (SP) மேற்பார்வையிலும், மாவட்டப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடனும் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.