FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எஸ்.ஐ.ஆர்.! 14 முறை இரு ஆணையர்கள் எதிர்த்தும் நடைமுறைப்படுத்திய தலைமைத் தேர்தல் ஆணையர்!

இரு ஆணையர்கள் எதிர்த்தும் எஸ்.ஐ.ஆர். அமல்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் பற்றி...

23 செப்டம்பர் 2026, 2:54 pm IST
ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி - ANI
பகிர்:

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு இரு தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நடைமுறைப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2025 ஆம் ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. தொடர்ந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது இந்தியத் தேர்தல் ஆணையம் வழக்கமாக மேற்கொள்ளும் நடவடிக்கை என்றாலும், இதுவரை இல்லாத வகையில் 13 கோடி வாக்காளர்களை நீக்கப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தங்களுக்கு தெரியாமலேயே / ஒப்புதல் பெறாமலேயே பல்வேறு முடிவுகளை தலைமைத் தேர்தல் ஆணையர் எடுத்ததாக கடந்த 10 மாதங்களில் 14 முறை இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

மோதல் ஏன்?

எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் போது புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்கும் படிவம் 6-ல், விண்ணப்பதாரர் அல்லது அவரது பெற்றோர் / தாத்தா, பாட்டி ஆகியோர் கடந்த எஸ்.ஐ.ஆர். வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனரா என்ற கேள்வி புதிதாக இணைக்கப்பட்டிருந்தது.

விதிகளில் திருத்தம் மேற்கொள்ளாமல் இத்தகைய மாற்றங்களைச் செய்வது ‘சட்டவிரோதமானது மற்றும் அங்கீகரிப்படாதது’ என்று இரு ஆணையர்களும் எதிர்ப்பு தெரிவித்தும், அது அமல்படுத்தப்பட்டது.

இதேபோல், வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் அதிகாரம் சட்டப்படி அந்தந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ளது. ஆனால், தில்லியில் உள்ள ஐடி பிரிவு மூலம் இத்தரவுகள் மையப்படுத்தப்படுவதாகவும், வாக்காளர் பதிவு அதிகாரிகள் கட்டுப்படுத்தப்படுவதாகவும் இரு ஆணையர்களும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட சிறப்பு தீர்ப்பாயம் மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்ததற்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் யார் அனுமதி பெற்று மேல்முறையீடு செய்யப்பட்டது என்று சுக்பீர் சிங் சந்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த இரு தேர்தல் ஆணையர்களும் நாட்டின் தலைமை செயலாளரான கேபினட் செயலாளருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 324 மற்றும் 2023-ஆம் ஆண்டின் தேர்தல் ஆணையச் சட்டப்படி, ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை (இருவரின் ஒப்புதல்) அடிப்படையிலோ மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:

”வாக்குத் திருட்டு என்பது இந்திய மக்களுக்கு எதிரான ஒரு குற்றம்; அது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

இந்த தேசத்துரோகச் செயலை பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை செய்துள்ளன. நீதி நிலைநாட்டப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

SIR - The Chief Election Commissioner who implemented it despite opposition from two fellow Commissioners on 14 occasions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments